Sunday, July 12, 2020

#KnowYourEnemy சீனாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.! #பாகம்2: சியா மற்றும் ஷாங் வம்சங்கள்.!

கடந்த கட்டுரையில் சீனா மன்னராட்சிக்குள்ளும்,  ஆரம்ப கால வெண்கல காலத்திற்குள்ளும் நுழைந்திருந்தது.  ஐந்து சக்கரவர்திகளில் கடைசி சக்கரவர்த்தியான 'ஷுன்', ராஜ்யத்தை 'யு' என்பவருக்கு கொடுத்து விட்டதாக நம்பப்படுகிறது. 'யு  தி கிரேட்' (Yu The Great) என்று தற்போது சீன மக்களால் பெருமதிப்புடன் அறியப்படும் அவர் சியா (Xia) வம்சத்தைத் தோற்றுவித்தார்.

சியா வம்சம் (Xia Dynasty) (2070-1600 BC)

பழங்கால சீனாவின் பிரதான நிலப்பரப்பு அடிக்கடி பெருவெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருந்தது. யு தான் அதைத் தடுத்து அணைகள், நீர்ப்பாசனத் தடங்கள் உருவாக்கி மக்களைக் காத்ததாகவும், இதனால் ஈர்க்கப்பட்ட சக்ரவர்த்தி ஷுன், ராஜ்யத்தை யுவுக்கு கொடுத்ததாகவும் சீன மக்கள் நம்புகின்றனர். 'நீரைக் கட்டுப்படுத்திய யு' (Yu The Great who controlled the Waters) என்றும் அழைக்கப்படுகிறார்.

King Yu The Great

450 வருடங்களாக 17 மன்னர்கள் க்ஸியா வம்ஸத்தில் ஆட்சி புரிந்தனர் என்று நம்பப்படுகிறது. இப்படி ஒரு வம்ஸம் இருந்ததாகவே வரலாற்று ஆதாரம் இல்லை என்று வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள்.. 1950களில் தோண்டியெடுக்கப்பட்ட சில பொருட்கள், மாளிகை போன்ற அமைப்புகள்  க்ஸியா காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சீன மக்கள் இந்த மன்னர்கள் மேல் பெருமதிப்பு கொண்டு இவர்களைத் தான் 'சீனாவைத் தோற்றுவித்தவர்கள்' என்று கருதுகிறார்கள். 

Location of Xia Dynasty/Courtesy: WikiMedia

க்ஸியா வம்சத்தை சேர்ந்த கடைசி மன்னர் ஜை (Jie)  மிகவும் கொடுங்கோலனாகவும், திறமையற்றவராகவும் இருந்ததால் டாங் (Tang) என்ற பழங்குடிக் குடிமகன் கலகம் செய்து அரியணையை கைப்பற்றினார். 'மின்டியாகோ போர்' என்று அழைக்கப்படும் போருடன், க்ஸியா வம்சம் முடிவுக்கு வந்து 'ஷாங் வம்சம்' (Shang) கிமு 1600களில் தொடங்கியது.

Battle of Mingtiao
Illustration courtesy: history.followcn.com

இங்கிருந்து சீனா' வரலாற்றுக்கு முந்தைய சீனாவில்' இருந்து  'பழங்கால சீனா' என்ற அத்தியாயத்தில் நுழைகிறது. 

ஷாங் வம்சம் (Shang Dynasty) (1600-1046 BC)

வரலாற்று ரீதியாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட முதல் சீன அரச வம்சம் ஷாங் வம்சம் ஆகும். நல்லபடியாக ஆட்சியை ஆரம்பித்து நடத்தி வந்த டாங் எல்லையை விரிவுபடுத்தி, மத்திய மற்றும் கீழ் மஞ்சள் நதி படுகையை ஆண்டு வந்தான். இக்காலகட்டத்தில், சீனர்கள் காலண்டர், கணக்கு ஆகியற்றுடன் பரிச்சயமாக இருந்ததுடன், அதிநவீன வெண்கல படைப்புகள், மட்பாண்டங்கள் மற்றும் டிரிங்கெட்டுகள் தயாரித்தனர்.

Image Courtesy: ThingLink

ஆனால் ஷாங் வம்சத்திற்கு அந்தளவுக்கு ஸ்திரத்தன்மை இல்லை. அடுத்த 250 வருடங்களில் ஐந்து முறை தலைநகரை மாற்றினர். கிமு 1350 வாக்கில் நிலைமை சீராகி, ஒருவழியாக  'அன்யாங் ' (Anyang) என்று அழைக்கப்டும் இடத்தைத் தலைநகராக கொண்டு ஆட்சி நடந்தது. இங்கிருந்து 'ஷாங் பொற்காலம்' ஆரம்பித்தது.

இதில் மிகவும் வெற்றிகரமான ஆட்சியாக கிமு 1250 முதல் 1192 வரை 58 வருடங்கள் ஆட்சிபுரிந்த 'வு டிங்' கின் ஆட்சி கருதப்படுகிறது. ஷாங் காலத்தை சார்ந்த மிகவும் நளினமாக உருவாக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் தொல்துறை ஆராய்ச்சியாளர்களால் தோண்டியெடுக்கப்பட்டன. வெண்கலம், தந்தம் மற்றும் பல விலையுயர்ந்த  மூலதனத்தைக்  கொண்டு செய்யப்பட்டவை. சீனாவின் எந்த ஆட்சியையும், ஷாங் வம்ச ஆட்சி அளவுக்கு வெண்கலம் உற்பத்தி செய்ததில்லை. டன் கணக்கில் வெண்கலப் பொருட்கள், கல்லறைகளில் தோண்டி எடுக்கப்பட்டன. விவசாயமும்  செழித்தது.

Bronze Relics of Shang Dynasty
Image Courtesy: Flickr
குதிரைகளும், தேர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு ஷாங் வம்சம் முடிவடையும் தருவாயில் அவை பரவலாக பயன்படுத்தப்பட்டன. எழுத்து அமைப்புகளும் முன்னேற்றப்பட்டிருந்தன.

எல்லா வம்சங்களும் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்? ஷாங் வம்சத்தின் கடைசி அரசனான டி க்ஸின் (Di Xin), வயதான காலத்தில் மிகவும் கொடுங்கோலனாக மாறி வந்ததாகவும், வென் என்ற மேற்கு எல்லைப்  பகுதியை ஆண்டு வந்த பிரபு, அரசரை விட பலமுள்ளவராக மாறியதாக பயந்த அரசர், அவரை சிறையில் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

வென் அரசரைப் பழி வாங்க திட்டமிட்டார். திட்டம் நிறைவேறுவதற்கு முன்பு மரணமடைந்தார். அவரது மகன் வு தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எத்தனித்து ஷாங் பிராந்தியத்தின் மையப்பகுதியைத் தாக்கினார். அவருக்கு ஷாங் மன்னரின் முன்னால் கூட்டாளிகளும் உதவி செய்தனர். முயே (Muye) போரில், அரசர் டி க்ஸினை தோற்கடித்து ஷாங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். தோற்ற ஷாங் அரசர் தன் அரண்மனைக்கு சென்று தீ மூட்டி, தற்கொலை செய்து கொண்டார். வு (Wu) புது அரசனாக முடி சூட்டிக் கொண்டார். அவரில் இருந்து சோஹு (Zhou) வம்சம் ஆரம்பித்தது.

Illustartion : The Battle of Muye
Image Courtesy: History Thrills

பாகம் மூன்று விரைவில்...

References
China by Raymond C.Nelson
Ancient China- Captivating History
Chinahighlights.com
No comments:

Post a Comment

Follow by Email