Wednesday, July 8, 2020

#KnowYourEnemy #பாகம்1: சீனாவின் மஞ்சள் நதியும், மஞ்சள் சக்ரவர்த்தியும்.!

சீனர்கள் தங்கள் வரலாறு, முன்னோர்கள் மீது தீவிரப் பற்றுள்ளவர்களாக அறியப்படுகிறார்கள். இங்கே தோண்டியெடுத்து நிரூபிக்கப்பட்ட வரலாற்றை விட, சீன மக்கள் எதை நம்புகிறார்கள் என்பது தான் அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள உதவும். சீனாவை பற்றி தெரிந்து கொள்வதென்றால் எந்த அளவுக்கு பின்னால் செல்லவேண்டும்? கிட்டத்தட்ட  4000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியான நாகரிகம் கொண்டது சீனா எனக் கூறப்படுகிறது. உலகத்தின் பழமையான நான்கு நாகரீகங்களில் எகிப்து, பாபிலோன், இந்தியாவுடன் சேர்ந்து சீனாவும் 'நாகரீகத்தின் தொட்டில்' என அறியப்படுகிறது. சீனா எவ்வாறு உருவானது என்ற புராண கதைகளும், Pre Historic Times  எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களும், கற்காலம், வெண்கலக் காலம், இரும்பு காலம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

சீனாவின் பழங்காலத்தை பற்றிக் கொஞ்சமும், அப்போது நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளையும்,மனிதர்களையும் பிறகு அப்படியே நகர்ந்து
கிபி 1600களில்  ஆட்சி புரிந்த குயிங் (Quing Dynasty)  மன்னர்களுக்குப் பிறகான வரலாற்றை சற்று விரிவாகவும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

சீனாவின் வரலாறை மொத்தம் ஐந்து பாகங்களாகப் பிரிக்கலாம். 1. வரலாற்றுக்கு முந்தைய  காலம் 2. பழங்காலம் 3. ஏகாதிபத்திய காலம் 4. சீனக் குடியரசு 5. மக்கள் சீனக் குடியரசு.

வரலாற்றுக்கு முந்தைய காலம் (Prehistoric Times) (கிமு 1600 வரை)

இதை மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1.பேலியோலிதிக் சகாப்தம் அல்லது ஆரம்ப கற்காலம். 2. நியோலிதிக் சகாப்தம் (கற்காலம்) 3. ஆரம்ப வெண்கலக் காலம்.

எழுதப்பட்ட, உறுதியான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இந்தக் காலத்தைக்
குறித்து இல்லை. இதன் வரலாறு யூகங்களையும், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களையும், புராணக் கதைகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் சீன முன்னோர்கள் மஞ்சள் நதி எனப்படும் ஹுவாங் நதி மற்றும் வெய் நதிக் கரையையைச் சுற்றிக் குடியேறினார்கள்.பொங்கி வரும் வெள்ளத்தால் ஒரு காலத்தில் 'சீனாவின் துயரம்' என அறியப்பட்ட அதே மஞ்சள் நதி தான். இது சீனாவின் அன்னை நதி என்றும் அறியப்படுகிறது.

Image Courtesy: chinahighlights.com 

இந்த நதி தற்போதைய பெய்ஜிங்கிற்கு தெற்கில் உள்ளது. பிறகு, சீனாவின் மற்றொரு பெரிய நதியான 'தி யாங்ட்ஸ்'( The Yangtze) நதியை சுற்றிலும் பரவினர். அது தான் ஆசியாவின் நீளமான நதியாகும். இப்போதும் கூட சீனாவின் அதிக மக்கள்தொகை உள்ள பகுதி இந்த இரு நதிகளுக்கு இடைப்பட்ட இடமாகும்.

Image courtesy: chinahighlights.com
உலகம் முழுமையுமே நாகரிகங்கள் நதிக்கரைகளில் தான் செழிக்கின்றன. இங்கும் வேளாண்மை செய்ய இந்நதிக்கரைகள் உகந்தவையாக இருந்தன. அரிசியும் தினையும் முக்கிய உணவுப் பயிர்கள். நாயும், பன்றியும் வீட்டு விலங்குகள். அம்பு, கொக்கி, ஊசி, ஈட்டி முதலியவை ஆயுதங்கள்.

கற்காலத்தின் பிற்பகுதியில், மஞ்சள் நதி பள்ளத்தாக்கு தன்னை யாங்ஷாவோ கலாச்சாரத்தின் மையமாக நிறுவத் தொடங்கியது.பின்னர், லாங்ஷான் கலாச்சாரம். இது கி.மு 3000 முதல் கிமு 2000 வரை மஞ்சள் நதியை மையமாகக் கொண்டிருந்தது.

இந்தக் காலம் முழுவதும் சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல், புராணக் கதைகளால் நிரம்பியுள்ளது. அதன் படி, பாங்கு (Pangu) என்ற மிகப் பெரிய கடவுள் உலகத்தை உருவாக்கினார் என்றும் அவருக்குப் பிறகு வந்த மூன்று அரசர்கள் உலகில் ஒழுங்கைக் கொண்டு வந்தனர் என்றும் அதற்குப் பிறகு வந்தவர்கள் 'ஐந்து சக்ரவர்த்திகள்' (Five Emperors). 'மஞ்சள் சக்கரவர்த்தி' (Yellow Emperor) என்று அழைக்கப்படும் ஹுஆங்டி (Huangdi) இவர்களில் முதலாமவர். கிமு 2700 க்கும் 2600க்கும் இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்ததாக சீன மக்களால் நம்பப்படுகிறார். இவர் 'சீன மக்களின் தந்தை' என்றும் அறியப்படுகிறார்.

Depiction of Yellow Emperor 
இவர் தான் சீன மக்களை காட்டுமிராண்டி காலகட்டத்தில் இருந்து நாகரிக காலத்திற்கு கொண்டு வந்ததாக நம்பப்படுகிறார். இந்த வரிசையில் வந்த அனைவரும் தங்கள் வாரிசுகளுக்கு ராஜ்யத்தை விட்டு செல்லாமல், தகுதி பெற்ற இன்னொருவருக்கு விட்டு சென்றதாக நம்பப்படுகிறது. இவர்கள் கடவுளுக்கு நிகரான சக்தி உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். இவை புராணங்களோ, கதைகளோ அதை நாம் நம்புவதும் நம்பாததும்  இங்கு முக்கியமில்லை. சீன மக்கள் இதை முழுவதுமாக நம்பி இந்த சக்ரவர்த்திகள் மீது பெரும் மரியாதையும், தங்கள் மூதாதையர்கள் மீது பெரு மதிப்பும் கொண்டவர்கள் என்பது தான் முக்கியம்.  21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, மஞ்சள் சக்கரவர்த்தியின் நினைவாக ஜெங்ஜோவில் நடைபெரும் வருடாந்திர   மூதாதையர் வழிபாட்டு விழாவவை, பில்லியன் கணக்கான சீன மக்கள் அவரவர்கள் மூதாதையர்களை வணங்குவதற்கானப் பாரம்பரியமாக மாறியுள்ளனர்.

Quingming Festival; Image Courtesy: ChinaDaily 

இந்த ஐந்து சக்கரவர்த்திகளில் கடைசி அரசர் யு தி கிரேட் என்று அழைக்கப்படும் யு மன்னருக்கு ராஜ்யத்தை விட்டு சென்றார். இங்கிருந்து சீனாவில் மன்னராட்சி ஆரம்பித்தது என யூகிக்கப்படுகிறது. இதே சமயத்தில் கற்காலத்தில் இருந்து ஆரம்ப வெண்கலக் காலத்தில் நுழைந்தது சீனா..


References

China by Raymond C.Nelson

Ancient China- Captivating History

Chinahighlights.com
No comments:

Post a Comment

Follow by Email