Sunday, July 26, 2020

"கார்கில் விஜய் திவாஸ்" - எதிரிகளை விரட்டியடித்து வெற்றிக் கொடி நாட்டிய தினம் !

"நான் வெற்றிகரமாக இந்தியக் கொடியை உயர்த்திய பின் திரும்பி வருவேன் அல்லது அதில் நான் மூடப்பட்டு திரும்பி வருவேன். ஆனால் நான் உறுதியாக வருவேன்."

கேப்டன் விக்ரம் பத்ரா கடைசியாகத் தன் வீட்டிற்கு ஹோலி விடுமுறைக்கு வந்த போது கூறிய வார்த்தைகள் இவை. Yeh  Dil Maange More என ஆர்ப்பரித்த அந்த இளம் வீரன், அடுத்த முறை வீட்டிற்கு வந்த போது, தான் கூறியது தேசியக் கொடி தன் உடல் மீது போர்த்தி தான் வந்தார்.  எதிரியை சின்னாபின்னாமாக்கி, அதே கொடியை வெற்றிகரமாக ஏற்றிய பிறகு.

இது போல எண்ணற்ற தியாகங்களும், வீரமும் நிறைந்த இந்திய ராணுவத்தின் உயரிய மரபைத் தான் விக்ரம் பத்ரா பின் தொடர்ந்தார். தன் மகன்களுக்கு பதிலாக தேசியக் கோடியை பெறும் பெற்றோர்களின் மனதிடம் தான் நாம் பாதுகாப்பாக தூங்க காரணமாய் இருக்கிறது.

 1999ம் ஆண்டின் கோடை காலத்தில் ,தாய் மண்ணை எதிரிகளிடமிருந்து மீட்க , கேட்டாலே புல்லரிக்க வைக்கும் சாகசக் கதைகளில் சிந்திய ரத்தங்களையும், தயங்காமல் செய்த தியாகங்களையும் தன்னுள்ளே அடக்கியது தான்  'ஆபரேஷன் விஜய்' .. அது நிறைவடைந்து, நாம் எதிரிகளை துரத்தியடித்து வெற்றிக்கொடி ஏற்றிய நாளே, கார்கில் விஜய் டிவாஸ். என்ன நடந்தது, எப்படி நடந்தது என நினைவு கூர்வோம்.

கார்கில் போர் நிறைவடைந்து இன்றுடன் 21 வருடங்கள் ஆகிறது. 
இந்தியா-பாகிஸ்தான், இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்று ஆன பிறகு (1998க்கு பிறகு)  நேரடிப் போர், பேரபாயத்தை ஏற்படுத்தும் என்ற சூழலில், இரு நாடுகளும் அமைதி சூழலை ஏற்படுத்த முழு முயற்சியில் ஈடுபடும் என நம்பப்பட்டது. அதில் ஒரு பாதி நிறைவேறியது. இந்தியா, அமைதிக்காக என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்தது. நம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிப்ரவரி 21,1999 அன்று முதல் முறையாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே அறிமுகமான பேருந்தில் சென்றார். அணு ஆயுத சூழல், அமைதிக்காக போடப்பட்ட இந்த ஒப்பந்தம் மிகவும் பிரபலமானது. அப்பபோதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இதில் கையெழுத்திட்டார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி பார்வேஸ் முஷாரப்க்கு இதில் உடன்பாடில்லை எனக் கூறப்பட்டது. .அதை நிரூபிக்கும் விதமாக, ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று மாதங்களுக்குள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், காஷ்மீர் தீவிரவாதிகளைப் போல் வேடமிட்டு இந்திய எல்லைக்குள் ஊடுருவினர்.

மூலோபாய ஆய்வாளர் லெப்டினென்ட் கர்னல் சி ஆர் சுந்தர் (ஓய்வு) கூறுகையில், கார்கில் போர் முஷாரப்பின் தனிப்பட்ட லட்சியத்தால் ஏற்பட்டது என்றும் 1984ல் சியாச்சர் பனி சிகரத்தை இந்தியாவிடம் இழந்த படையில் இருந்த முஷாரப்பிற்கு,கார்கிலை கைப்பற்ற வேண்டும் என்பது பல்லாண்டு ஆசை எனவும், இதற்கான திட்டம் 1998ல் அவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்பட ஆரம்பித்தது என்றும் கூறுகிறார் 

எளிதாகப் புரிந்து கொள்வதற்காக நாம், கார்கில் போரை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிலாம். காஷ்மீரி தீவிரவாதிகளைப் போல் வேடமிட்டு, கார்கிலை ஒட்டிய இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் நுழைந்து குறிப்பிடத்தக்க அளவு பகுதிகளையும்,முகடுகளையும் ஆக்கிரமித்தது. இந்தியா இதைக்  கண்டறிந்து, இழந்த பகுதிகளை மீட்க  படைகள் திரட்டி தாக்குதலை ஆரம்பித்தது. இந்தியப் படையினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே நடந்த பெரிய அளவிலான  போர் மற்றும் எதிரிப் படைகளை நம்
இடத்தில் இருந்து துரத்தியடித்து நிலைமையை முன்பிருந்தது போல் மாற்றிய இந்தியாவின் வெற்றி.

கார்கில் நகரம் ஸ்ரீநகரிலிருந்து 205 கி.மீ (127 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கார்கில் குறி வைக்கப்பட்டதற்கு காரணம் அதன் நிலப்பரப்பு பல இராணுவ நிலைகளை முன்கூட்டியே கைப்பற்றுவதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த மலை முகடுகளை கைப்பற்றிய பிறகு தற்காத்துக் கொள்வது மிக சுலபம். மலை சூழல் யுத்தத்தில்  ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுவதற்கான எந்தவொரு தாக்குதலுக்கும் பாதுகாவலர்களுக்கு தாக்குதல் நடத்துபவர்களின் விகிதம் மிக அதிகமாக தேவைப்படுகிறது, மேலும் உயரம் மற்றும் உறைபனி வெப்பநிலையால் சிரமங்கள் அதிகரிக்கும். 

மே மாத ஆரம்பத்தில், பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ ஆரம்பித்தது உள்ளூர் ஆடுமேய்ப்பர்களால், இந்திய ராணுவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இதைக் கண்காணிக்க ரோந்துப் பணியில் சென்ற 5 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

மே 15, 1999 அன்று, 4 வது ஜாட் ரெஜிமென்ட்டின் வீரர்களான  காலியா, அர்ஜுன் ராம், பன்வர் லால் பகாரியா, பிகா ராம், மூலா ராம் மற்றும் நரேஷ் சிங் ஆகியோர், லடாக் மலைகலில் இருந்த காக்ஸர் செக்டர் பஜ்ரங் போஸ்டில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் படைகளுடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. வெடிமருந்து தீர்ந்த நிலையில், பாகிஸ்தான் ரேஞ்சர்களின் படைப்பிரிவால் சூழப்பட்டு, இந்திய வலுவூட்டல்கள் அவர்களை அடைவதற்குள் அவர்கள் கைப்பற்றப்பட்டனர் .

அவர்கள் பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் இதை முழுவதுமாக மறுத்தது. இதுவரை, வழக்கமான காஷ்மீர் தீவிரவாதிகளின் கைவரிசை என நம்பி வந்த இந்தியா, ஆக்கிரமிப்பின் தீவிரத்தை உணர்ந்து பதில் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது.

 போரின் சுருக்கமான காலக்கோடு பின்வருமாறு..

மே 3ம் தேதி, கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் உள்ளூர் மேய்ப்பர்களால் இந்திய ராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. மே ஐந்தில் இதைக் கண்காணிக்க ராணுவ ரோந்து அனுப்பப்பட்டது; 6 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

மே 9ல்  பாகிஸ்தான் இராணுவம் நடத்திய கடும் ஷெல் தாக்குதலில் கார்கிலில் வெடிமருந்து dump சேதமடைந்துள்ளன. மே 10ல் ஊடுருவல்கள் முதலில் டிராஸ், கக்சர் மற்றும் முஷ்கோ செக்டார்களில் கவனிக்கப்பட்டன. மே மாத மத்தியில் இந்திய ராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து கார்கில் செக்டருக்கு அதிகமான ராணுவத்தை நகர்த்தியது.

மே 26ல் IAF, ஊடுருவல்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை தொடன்கியது. மே 27ல்  இரண்டு பாகிஸ்தான் இராணுவ வான் பாதுகாப்பு படையாழ்  நமது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, லெப்டினென்ட் கம்பம்பதி நாச்சிகேதா போர்க்கைதியாக  சிறை பிடிக்கப்பட்டார். மே  28ல், IAF MI-17 பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதில் இருந்த  நான்கு பேர் இறந்தனர்.

ஜூன் 6ல் இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது. ஜூன் 9ல், இந்திய இராணுவம் படாலிக் துறையில் இரண்டு முக்கிய இடங்களை மீண்டும் கைப்பற்றுகிறது. கார்கில் போரில், பாகிஸ்தான் இராணுவத்தின் தலையீட்டிற்கு சான்றாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் ராவல்பிண்டியில் ஜெனரல் ஸ்டாஃப் தலைமை லெப்டினன்ட் ஜெனரல் அஜீஸ் கான் ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஜூன் 11 இந்தியா வெளியிடுகிறது.

ஜூன் 15ல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், ஒரு தொலைபேசி உரையாடலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கார்கிலிலிருந்து பின்வாங்கும் படி கட்டாயப்படுத்தினார். ஜூன் 29ல்  பாகிஸ்தான் இராணுவத்தின் உணவு மற்றும் ஆயுத விநியோக பாதை அவர்களின் சொந்த பிரதமரால் நிறுத்தப்பட்டது எனவே அவர்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.  இந்திய இராணுவம் புலி மலையை நோக்கி அனுப்பப்பட்டது. ஜூலை 2ல்  இந்திய இராணுவம் கார்கிலில் முப்பரிமாண தாக்குதலை நடத்துகிறது.

ஜூலை 4ல்  இந்திய இராணுவம் 11 மணி நேர போருக்குப் பிறகு புலி மலையை மீண்டும் கைப்பற்றுகிறது. பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கிளிண்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து கார்கிலிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் விலகியதாக அறிவித்தார்.

ஜூலை 11ல் பாகிஸ்தான் பின்வாங்க தொடங்குகிறது; படாலிக் நகரில் முக்கிய சிகரங்களை இந்தியா கைப்பற்றுகிறது. ஜூலை 14ல் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆபரேஷன் விஜயை வெற்றி என  அறிவிக்கிறார். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கு, இந்திய அரசு நிபந்தனை விதிக்கிறது. ஜூலை 26ல்  கார்கில் மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்து, ஊடுருவல்களை முழுமையாக துர த்தியடித்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. 

இந்தியத் தரப்பில் 527 பேர் வீர மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தாய் நாட்டைக் காக்கும் முயற்சியில், வீர  மரணமடைந்த, காயமுற்ற, பங்கெடுத்த அனைத்து ராணுவ வீரர்களுமே ஹீரோக்கள் தான். ராணுவத்தின் உயர் விருதான பரம் வீர் சக்ரா நான்கு பேருக்கு வழங்கப்பட்டது.

Kargil Memorial
Image Courtesy-New Indian Express


 கேப்டன் விக்ரம் பாத்ரா ஜம்மு-காஷ்மீர் ரைஃபிள்ஸின் அதிகாரியாக இருந்தார். ஆபரேஷன் விஜய்யின் ஒரு பகுதியாக, கேப்டன் பாத்ரா ஐந்து எதிரி வீரர்களை தனது கைகளால் கொன்றார். அவரது குறியீடு பெயர் ஷெர் ஷா. அவரது வீர மரணத்திற்குப் பிறகு மதிப்புமிக்க பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றார்.

லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே,  கோர்கா ரைஃபிள்ஸின் ஒரு பகுதியாக ஆபரேஷன் விஜய்யின் போது தொடர்ச்சியான தாக்குதல்களில் ஊடுருவியவர்களை பெரும் இழப்புகளுடன் பின்னுக்குத் தள்ளினார். அவரும் தன் வீரமரணத்திற்கு பிறகு பரம் வீர் சக்ரா விருதை பெற்றார்.

ஜம்மு-காஷ்மீர் ரைபிள்சை சேர்ந்த ரைபிள்மேன் சஞ்சய் குமார்,  முஷ்கோ பள்ளத்தாக்கில் ஒரு புள்ளியைக் கைப்பற்றுவதற்கான ஒரு நடவடிக்கையின் போது,எதிரிகளுடன் நேருக்கு நேராக போரிட்டு அவர்களை துரத்தினார், அவர்களுடைய இயந்திரத் துப்பாக்கியையே பயன்படுத்தி, அவர்கள் தப்பி ஓடியபோதும் அவர்களில் பலரைக் கொன்றார். அவர் பரம் வீர் சக்ர விருதை உயிருடன் பெற்றார்.

18 கிரெனேடியர்களைச் சேர்ந்த கிரெனேடியர் யாதவுக்கும் பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது. அவர் டைகர் ஹில் கைப்பற்றிய கதக் படைப்பிரிவின் முன்னணி அணியின் ஒரு பகுதியாக இருந்தார். கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில், அவர் பல காயங்களைத் தாங்கி, எதிரி நிலைக்கு தவழ்ந்து சென்றார்.

பாக்கிஸ்தான் தரப்பில் பலரும், பல விதமான எண்களைக் கூறி வந்தனர். போரில்  ராணுவ வீரர்களின் பங்களிப்பையே முழுவதுமாக ஆரம்பத்தில் மறுத்த பாக்கிஸ்த்தான் அரசு, இறந்த வீரர்களின்  உடல்களைக் கூட வாங்க மறுத்தது.  இது பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இப்போது, போருக்கு யார் காரணம் என்பதற்கு முஷாரப்பும், நவாஸ் ஷெரிப்பும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.

அணு ஆயுத போர் மூளலாம் என்ற அச்சத்தினாலேயே பாகிஸ்தான் பின் வாங்கியிருக்கலாம்.  ஆனால் உலக மேடையில் பாகிஸ்தான் கடும் கண்டனங்களுக்கு ஆளானதும், அவமானப்பட்டதும் உண்மை.  

90ஸ் கிட்ஸ்  என்று அழைக்கப்படும் நம் தலைமுறைக்கு 'கார்கில் போர்' மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். நம் நாட்டில், போர் என்பதை பாடங்களிலும், திரைப்படங்களிலும்  மட்டுமே பார்த்து வந்தவர்கள், செய்தித்தாளில் படிக்கும் நிலை வந்தது. ஹீரோக்கள் நம்மிடையே வாழ்ந்து தான் வந்திருக்கிறார்கள்..நாம் தான் அவர்களை வேறு எங்கெங்கோ தேடியிருக்கிறோம் என்பதை உணர்த்தியது.புல்லரிக்க வைக்கும் வீரக் கதைகளும், ஒவ்வொரு வருடமும் வீட்டு வாசலில் 'கார்கில் விஜய் திவாஸ்க்கு' விளக்கேற்றும் போது சிந்தும் கண்ணீர்த் துளிகளும் கார்கில் ஹீரோக்களின் நினைவை எப்போதும் எதிரொலிக்கும்.Thursday, July 23, 2020

சந்திரசேகர் ஆசாத்- சாகும் வரை சுதந்திரமாக இருந்த போராளி.!!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி நாம் மறுபடியும் மறுபடியும் நினைவு கூற வேண்டியது அவசியம். ஏன்? பாரதியார் சுதந்திரப் பயிரை பற்றி

 "தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ திருவுளமோ" 

எனப் பாடுகிறார். அத்தகைய சுதந்திரப் பயிரை நாம் பெற எத்தனை பேரின் கண்ணீர் மட்டுமல்ல ரத்தமும் சிந்தப்பட்டது என்பதை அறிவது அவசியம் தானே? 

ஜெனரல் G.D. பாக்ஷி தனது "போஸ் அல்லது காந்தி, இந்தியாவிற்கு யார் விடுதலை பெற்றுத் தந்தது? என்ற புத்தகத்தில், உண்மையில் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியதற்குக் காரணம், இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பி வந்த இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் மூலம், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் ராணுவக் கிளர்ச்சி ஏற்படும் என பிரிட்டிஷ் அஞ்சியதேயாகும் என வாதிடுகிறார். அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கிளிமெண்ட் அட்லீ இந்தியாவிற்கு வந்த போது இதை ஒப்புக் கொண்டதாகவும் கூறுகிறார்.

அகிம்சை வழியில் போராடியவர்களுக்கு பல வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டாலும், புரட்சியாளர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது அல்லது அந்தமான் சிறையில் நிரந்தரமாக இடம் ஒதுக்கப்பட்டது. புரட்சி, தூக்கு என்று கூறியவுடன் பகத்சிங்கின் நினைவு வருவது இயல்புதான். அந்த பகத்சிங்கின் குருவாக அறியப்படும் சந்திரசேகர் ஆசாத் அல்லது சந்திரசேகர் திவாரியின் பிறந்த தினம் இன்று. 

Image Courtesy : Wikipedia 

மீசையை முறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தின் மூலம் நம் மனதில் இடம் கொண்டிருக்கும் சந்திரசேகர ஆசாத் ஜூலை 23-ஆம் தேதி 1906-ல் உத்திரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பண்டிட் சீதாராம் திவாரி, தாய் ஜகராணி தேவி. சந்திர சேகர் ஒரு சமஸ்கிருத பண்டிதராக வேண்டும் என விரும்பிய அவர் அன்னை அதற்காக அவரை வாரணாசிக்கு அனுப்பி வைத்தார். 

1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சந்திரசேகரின் மனதை மிகவும் பாதித்தது. அப்போது அவருக்கு வயது 13. தனது 15வது வயதில் காந்தி அறிவித்த அகிம்சை வழிப் போராட்டமான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அப்போது நடந்த ஒரு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மாஜிஸ்ட்ரேட் அவர் பெயரை கேட்ட போது ஆசாத் என்று கூறினார். அப்படி என்றால் 'சுதந்திரமானவன்' (Free) என்று பொருள். அவர் மைனர் என்பதால் அவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்படவில்லை. ஆனால் 15 கசையடிகள் கொடுக்கப்பட்டது. தான் உயிருடன் இருக்கும் வரை பிரிட்டிஷ் போலீசிடம் கைதாக மாட்டேன் என உறுதியெடுத்த அவர் அதன்பிறகு சந்திரசேகர் ஆசாத் என அறியப்பட்டார். 

இளம் புரட்சியாளர்களான ஆசாத், பகத்சிங், சுக்தேவ் போன்றவர்கள் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். ஆனால் 1922-இல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை, காங்கிரஸ் கூட்டத்தில் எந்த ஆலோசனையோ, விவாதங்களோ இல்லாமல் திடீரென்று நிறுத்தியது காங்கிரசுக்குள் பிளவை ஏற்படுத்தியது. அங்கே ராம்பிரசாத் பிஸ்மில் தலைமையில் புரட்சிப் பிரிவு உருவானது. ஹிந்துஸ்தான் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன் (HRA) பிறந்தது. காந்தியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த ஆசாத் காங்கிரஸின் தேசிய தலைமையில் நம்பிக்கை இழந்தார். இந்திய விடுதலையைப் பெற அகிம்சை வழியை கைவிட்டு புரட்சியைக் கையிலெடுத்தார். 

ஆசாத் சில காலம் ஜான்சியில் தங்கியிருந்தார். ஜான்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர்ச்சா காட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். தன் குழுவை சேர்ந்த மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்தார். பண்டிட் ஹரிஷங்கர் பிரம்மச்சாரி என்ற பெயரில் அவர் வாழ்ந்த திமர்புரா கிராமம் தற்போது ஆசாத்புரா என மத்தியப் பிரதேச அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

1924 வாக்கில் பகத் சிங், சுக்தேவ் தாப்பர் ஆகியோருடன் HRA-வில் இணைந்தார் ஆசாத். HRAவின் மிக முக்கியமான, காக்கோரி ரயில் கொள்ளை 1925-ல் நடந்தது. ஆகஸ்ட் 9, 1925ல் ஷாஜகான்பூரில் இருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் துப்பாக்கி முனையில் பிரிட்டிஷ் கருவூலத்திற்கு சென்று கொண்டிருந்த பணத்தை மட்டுமே கொள்ளையடித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக, ஒரு இந்தியர் துப்பாக்கி குண்டுக்கு பலியானதால் இது கொலை வழக்கானது. மொத்தம் 40 பேர் இந்தியா முழுவதிலுமிருந்து கைது செய்யப்பட்டனர். இதில் ராம்பிரசாத் பிஸ்மில், தாக்கூர் ரோஷன் சிங், ராஜேந்திர நாத், அஷுபாகுல்லாஹ் கான் ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 1929 டிசம்பரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இருவர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 15 பேர் ஆதாரமின்மையால் விடுவிக்கப்பட்டனர். 3 பேர் தப்பித்து சென்றனர். மற்றவர்கள் 4 வருடம் முதல் 14 வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். முக்கியக் குற்றவாளிகளில் ஆசாத் மட்டுமே பிடிபடாமல், தலைமறைவாக இருந்தார். 

1928ல் HRAவை மறுசீரமைத்த ஆசாத், அதன் பெயரை, ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன் (HRSA) என மாற்றி அமைத்தார். இதற்கு பெரும்பாலும் சோஷலிசத்தின் மீது பகத்சிங்கிற்கு இருந்த ஈர்ப்பு காரணம் என நாம் கொள்ளலாம். 1928ல் சைமன் கமிஷன் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை பற்றி ஆராய்ந்து இங்கிலாந்திற்கு குறிப்பு அனுப்ப இந்தியாவிற்கு வந்தது. இதில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லை. இதை வன்மையாக எதிர்த்த HRSA சைமன் கமிஷனர் உறுப்பினர்களின் மீது குண்டு வீச முடிவு செய்தது. 

சைமன் கமிஷனுக்கு எதிராக பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் தலைமையில் லாகூரில் அமைதியான போராட்டம் நடந்தது. ஆனால் போலீஸ் இதற்கு வன்முறையால் பதிலடி கொடுத்தது. அப்போது நடந்த தடியடியில் காயமுற்ற லாலா லஜபதிராய் சில நாட்களில் இறந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பழிவாங்க முடிவு செய்த சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தாப்பர், சந்திரசேகர ஆசாத், பகத்சிங் ஆகியோர் கூட்டாளிகளாக திட்டமிட்டனர். உதவிக் கண்காணிப்பு ஆணையர் ஜான் சாண்டர்ஸ், பகத்சிங் மற்றும் ராஜ்குருவால் சுடப்பட்டு இறந்தார். தப்பித்துப் போகும் போது தங்களை துரத்திய கான்ஸ்டபிளை ஆசாத் சுட்டார். நான்கு பேரும் தலைமறைவாகினர்.

 1929இல் டெல்லியில் இருந்த மத்திய சட்டமன்றத்தில் கூட்டம் நடைபெற்ற போது, காலி இருக்கைகளில் குண்டுகளை வீசிய பகத்சிங் மற்றும் படுகேஸ்வர் தத் தாங்களாகவே முன்வந்து அங்கேயே கைதாகினர். அங்கே நிறைவேற்றப்பட இருந்த சர்ச்சைக்குரிய பொது பாதுகாப்பு மசோதா, வர்த்தக தகராறு மசோதா ஆகிவற்றைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக பிறகு விளக்கம் கொடுக்கப்பட்டது. கைது செய்யப்படும்போது இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற கோஷங்களை எழுப்பினர். விசாரணைக்கு பிறகு பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

1931 பிப்ரவரியில், தன் கூட்டாளிகள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஆசாத் ஜவாஹர்லால் நேருவை சந்தித்தார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திட இருந்த நிலையில் அது நிறைவேற்றப்பட்டால், புரட்சியாளர்களுக்கு நிலைமை இன்னும் மோசமாகும். எனவே நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அலகாபாத்தில் உள்ள நேருவின் வீட்டிற்கு நேருவை சந்திக்க சென்றார். இந்த சந்திப்பு குறித்து, நேரு தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். ஆசாத் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்பது போலவே வருணிக்கிறார். (உண்மையில் அந்த சமயத்தில் ஆசாத் பெரிய ஆள் தான்). 10 வரிகளில் 10 முறை ஆசாத்தைத் தீவிரவாதி எனக் குறிப்பிடும் நேரு, அவர் இயக்கத்திற்கு பாசிச சிந்தனைகள் இருந்ததாகவும் குற்றம் சுமத்துகிறார். பகத்சிங் பற்றிய உரையாடலே நேருவின் சுயசரிதையில் இல்லை. 

"அந்த நேரத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது, இது இந்தியாவில் பயங்கரவாதக் குழுவின் மனதைப் பற்றிய ஒரு பார்வையை எனக்குக் கொடுத்தது" 

"அவர்களில் பலர், நிச்சயமாக பாசிச மனநிலையைக் கொண்டுள்ளனர் என்று எனக்குத் தோன்றுகிறது" 

கோபமடைந்த ஆசாத், நேருவின் வீடான ஆனந்த பவனை விட்டு வெளியேறினார். 

ஆசாத், நேருவின் வீட்டிற்கு சென்ற தேதி சரிவரத் தெரியவில்லை. (பிப்ரவரி கடைசி என்பதைத் தவிர). பிப்ரவரி 27ல் ஆல்பிரட் பூங்காவிற்குச் சென்றார் ஆசாத். அவருடன் மற்றொரு புரட்சியாளர் சுக்வீர் ராஜ் இருந்தார். திடீரென துணை காவல்துறை கண்காணிப்பாளர் பிஷேஷ்வர் சிங்குடன் ஜான் நாட்-போவர் அங்கு ஆசாத்தை பிடிக்க வந்தார். ஒரு போலீஸ்காரர் தன்னை நோக்கி விரலை சுட்டிக்காட்டியதைக் கண்ட ஆசாத் உடனடியாக தனது கைத்துப்பாக்கியை பாக்கெட்டிலிருந்து வெளியே இழுத்து நோட்-போவரின் மணிக்கட்டில் சுட்டார். பிஷேஷ்வர் சிங் ஆசாத்தை கடுமையாகத் திட்டினார். ஆசாத் உடனடியாக பிஷேஸ்வர் சிங்கை வாயில் சுட்டு, அவரது தாடையை உடைத்தார். சில நிமிடங்களில், போலீசார் ஆல்பிரட் பூங்காவை சுற்றி வளைத்தனர்.​​ஆசாத்தின் வலது தொடையில் புல்லட் துளைத்தது. இதனால் அவர் தப்பிப்பது கடினமானது. ஆனால் அப்போதும் கூட சுக்தேவ் ராஜை தப்பிக்க வைத்தார். இறுதியாக, ஒரு துப்பாக்கி குண்டு மட்டுமே தனது துப்பாக்கியில் இருந்த நிலையில், தன் 24-வது வயதில் போலீசாரிடம் கைதாவதற்கு பதிலாக சந்திர சேகர் ஆசாத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து விஷயம் தெரிந்து பூங்காவில் கூடிய மக்கள் ஆசாத்தைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர். 

அவர் இறந்த ஒரு மாதத்திற்குள்ளாக, அவரது கூட்டாளிகளான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தாப்பர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். HRSA கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போனது. இந்த இளம் போராளிகளுடைய மரணம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வேகப்படுத்தியது. சுயராஜ்யத்தின் அனலை மக்கள் மனதில் ஊட்டியது. 

2016-ல் சந்திர சேகர் ஆசாத்தின் மருமகன் (Nephew) சுர்ஜித் ஆசாத், நேரு தான் ஆசாத் இருக்கும் இடத்தை போலீசிற்குத் தெரியப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தினார். அவர் இறந்த ஆல்பிரெட் பூங்கா, சந்திரசேகர் ஆசாத் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கே அவருக்கு ஒரு சிலை உள்ளது. பல திரைப்படங்களும், நாடகங்களும் அவர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடி "ஆசாத் தனது உயிரைத் தியாகம் செய்தார், ஆனால் வெளிநாட்டு ஆட்சிக்கு தலைவணங்கவில்லை" என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

15 வயதில் தான் உயிருள்ள வரை சுதந்திரமாக மட்டுமே இருப்பேன் என உறுதி எடுத்த ஆசாத், அதைக் கடைசி வரை காப்பாற்றினார்.


Sunday, July 12, 2020

#KnowYourEnemy சீனாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.! #பாகம்2: சியா மற்றும் ஷாங் வம்சங்கள்.!

கடந்த கட்டுரையில் சீனா மன்னராட்சிக்குள்ளும்,  ஆரம்ப கால வெண்கல காலத்திற்குள்ளும் நுழைந்திருந்தது.  ஐந்து சக்கரவர்திகளில் கடைசி சக்கரவர்த்தியான 'ஷுன்', ராஜ்யத்தை 'யு' என்பவருக்கு கொடுத்து விட்டதாக நம்பப்படுகிறது. 'யு  தி கிரேட்' (Yu The Great) என்று தற்போது சீன மக்களால் பெருமதிப்புடன் அறியப்படும் அவர் சியா (Xia) வம்சத்தைத் தோற்றுவித்தார்.

சியா வம்சம் (Xia Dynasty) (2070-1600 BC)

பழங்கால சீனாவின் பிரதான நிலப்பரப்பு அடிக்கடி பெருவெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருந்தது. யு தான் அதைத் தடுத்து அணைகள், நீர்ப்பாசனத் தடங்கள் உருவாக்கி மக்களைக் காத்ததாகவும், இதனால் ஈர்க்கப்பட்ட சக்ரவர்த்தி ஷுன், ராஜ்யத்தை யுவுக்கு கொடுத்ததாகவும் சீன மக்கள் நம்புகின்றனர். 'நீரைக் கட்டுப்படுத்திய யு' (Yu The Great who controlled the Waters) என்றும் அழைக்கப்படுகிறார்.

King Yu The Great

450 வருடங்களாக 17 மன்னர்கள் க்ஸியா வம்ஸத்தில் ஆட்சி புரிந்தனர் என்று நம்பப்படுகிறது. இப்படி ஒரு வம்ஸம் இருந்ததாகவே வரலாற்று ஆதாரம் இல்லை என்று வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள்.. 1950களில் தோண்டியெடுக்கப்பட்ட சில பொருட்கள், மாளிகை போன்ற அமைப்புகள்  க்ஸியா காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சீன மக்கள் இந்த மன்னர்கள் மேல் பெருமதிப்பு கொண்டு இவர்களைத் தான் 'சீனாவைத் தோற்றுவித்தவர்கள்' என்று கருதுகிறார்கள். 

Location of Xia Dynasty/Courtesy: WikiMedia

க்ஸியா வம்சத்தை சேர்ந்த கடைசி மன்னர் ஜை (Jie)  மிகவும் கொடுங்கோலனாகவும், திறமையற்றவராகவும் இருந்ததால் டாங் (Tang) என்ற பழங்குடிக் குடிமகன் கலகம் செய்து அரியணையை கைப்பற்றினார். 'மின்டியாகோ போர்' என்று அழைக்கப்படும் போருடன், க்ஸியா வம்சம் முடிவுக்கு வந்து 'ஷாங் வம்சம்' (Shang) கிமு 1600களில் தொடங்கியது.

Battle of Mingtiao
Illustration courtesy: history.followcn.com

இங்கிருந்து சீனா' வரலாற்றுக்கு முந்தைய சீனாவில்' இருந்து  'பழங்கால சீனா' என்ற அத்தியாயத்தில் நுழைகிறது. 

ஷாங் வம்சம் (Shang Dynasty) (1600-1046 BC)

வரலாற்று ரீதியாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட முதல் சீன அரச வம்சம் ஷாங் வம்சம் ஆகும். நல்லபடியாக ஆட்சியை ஆரம்பித்து நடத்தி வந்த டாங் எல்லையை விரிவுபடுத்தி, மத்திய மற்றும் கீழ் மஞ்சள் நதி படுகையை ஆண்டு வந்தான். இக்காலகட்டத்தில், சீனர்கள் காலண்டர், கணக்கு ஆகியற்றுடன் பரிச்சயமாக இருந்ததுடன், அதிநவீன வெண்கல படைப்புகள், மட்பாண்டங்கள் மற்றும் டிரிங்கெட்டுகள் தயாரித்தனர்.

Image Courtesy: ThingLink

ஆனால் ஷாங் வம்சத்திற்கு அந்தளவுக்கு ஸ்திரத்தன்மை இல்லை. அடுத்த 250 வருடங்களில் ஐந்து முறை தலைநகரை மாற்றினர். கிமு 1350 வாக்கில் நிலைமை சீராகி, ஒருவழியாக  'அன்யாங் ' (Anyang) என்று அழைக்கப்டும் இடத்தைத் தலைநகராக கொண்டு ஆட்சி நடந்தது. இங்கிருந்து 'ஷாங் பொற்காலம்' ஆரம்பித்தது.

இதில் மிகவும் வெற்றிகரமான ஆட்சியாக கிமு 1250 முதல் 1192 வரை 58 வருடங்கள் ஆட்சிபுரிந்த 'வு டிங்' கின் ஆட்சி கருதப்படுகிறது. ஷாங் காலத்தை சார்ந்த மிகவும் நளினமாக உருவாக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் தொல்துறை ஆராய்ச்சியாளர்களால் தோண்டியெடுக்கப்பட்டன. வெண்கலம், தந்தம் மற்றும் பல விலையுயர்ந்த  மூலதனத்தைக்  கொண்டு செய்யப்பட்டவை. சீனாவின் எந்த ஆட்சியையும், ஷாங் வம்ச ஆட்சி அளவுக்கு வெண்கலம் உற்பத்தி செய்ததில்லை. டன் கணக்கில் வெண்கலப் பொருட்கள், கல்லறைகளில் தோண்டி எடுக்கப்பட்டன. விவசாயமும்  செழித்தது.

Bronze Relics of Shang Dynasty
Image Courtesy: Flickr
குதிரைகளும், தேர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு ஷாங் வம்சம் முடிவடையும் தருவாயில் அவை பரவலாக பயன்படுத்தப்பட்டன. எழுத்து அமைப்புகளும் முன்னேற்றப்பட்டிருந்தன.

எல்லா வம்சங்களும் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்? ஷாங் வம்சத்தின் கடைசி அரசனான டி க்ஸின் (Di Xin), வயதான காலத்தில் மிகவும் கொடுங்கோலனாக மாறி வந்ததாகவும், வென் என்ற மேற்கு எல்லைப்  பகுதியை ஆண்டு வந்த பிரபு, அரசரை விட பலமுள்ளவராக மாறியதாக பயந்த அரசர், அவரை சிறையில் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

வென் அரசரைப் பழி வாங்க திட்டமிட்டார். திட்டம் நிறைவேறுவதற்கு முன்பு மரணமடைந்தார். அவரது மகன் வு தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எத்தனித்து ஷாங் பிராந்தியத்தின் மையப்பகுதியைத் தாக்கினார். அவருக்கு ஷாங் மன்னரின் முன்னால் கூட்டாளிகளும் உதவி செய்தனர். முயே (Muye) போரில், அரசர் டி க்ஸினை தோற்கடித்து ஷாங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். தோற்ற ஷாங் அரசர் தன் அரண்மனைக்கு சென்று தீ மூட்டி, தற்கொலை செய்து கொண்டார். வு (Wu) புது அரசனாக முடி சூட்டிக் கொண்டார். அவரில் இருந்து சோஹு (Zhou) வம்சம் ஆரம்பித்தது.

Illustartion : The Battle of Muye
Image Courtesy: History Thrills

பாகம் மூன்று விரைவில்...

References
China by Raymond C.Nelson
Ancient China- Captivating History
Chinahighlights.com
Wednesday, July 8, 2020

#KnowYourEnemy #பாகம்1: சீனாவின் மஞ்சள் நதியும், மஞ்சள் சக்ரவர்த்தியும்.!

சீனர்கள் தங்கள் வரலாறு, முன்னோர்கள் மீது தீவிரப் பற்றுள்ளவர்களாக அறியப்படுகிறார்கள். இங்கே தோண்டியெடுத்து நிரூபிக்கப்பட்ட வரலாற்றை விட, சீன மக்கள் எதை நம்புகிறார்கள் என்பது தான் அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள உதவும். சீனாவை பற்றி தெரிந்து கொள்வதென்றால் எந்த அளவுக்கு பின்னால் செல்லவேண்டும்? கிட்டத்தட்ட  4000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியான நாகரிகம் கொண்டது சீனா எனக் கூறப்படுகிறது. உலகத்தின் பழமையான நான்கு நாகரீகங்களில் எகிப்து, பாபிலோன், இந்தியாவுடன் சேர்ந்து சீனாவும் 'நாகரீகத்தின் தொட்டில்' என அறியப்படுகிறது. சீனா எவ்வாறு உருவானது என்ற புராண கதைகளும், Pre Historic Times  எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களும், கற்காலம், வெண்கலக் காலம், இரும்பு காலம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

சீனாவின் பழங்காலத்தை பற்றிக் கொஞ்சமும், அப்போது நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளையும்,மனிதர்களையும் பிறகு அப்படியே நகர்ந்து
கிபி 1600களில்  ஆட்சி புரிந்த குயிங் (Quing Dynasty)  மன்னர்களுக்குப் பிறகான வரலாற்றை சற்று விரிவாகவும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

சீனாவின் வரலாறை மொத்தம் ஐந்து பாகங்களாகப் பிரிக்கலாம். 1. வரலாற்றுக்கு முந்தைய  காலம் 2. பழங்காலம் 3. ஏகாதிபத்திய காலம் 4. சீனக் குடியரசு 5. மக்கள் சீனக் குடியரசு.

வரலாற்றுக்கு முந்தைய காலம் (Prehistoric Times) (கிமு 1600 வரை)

இதை மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1.பேலியோலிதிக் சகாப்தம் அல்லது ஆரம்ப கற்காலம். 2. நியோலிதிக் சகாப்தம் (கற்காலம்) 3. ஆரம்ப வெண்கலக் காலம்.

எழுதப்பட்ட, உறுதியான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இந்தக் காலத்தைக்
குறித்து இல்லை. இதன் வரலாறு யூகங்களையும், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களையும், புராணக் கதைகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் சீன முன்னோர்கள் மஞ்சள் நதி எனப்படும் ஹுவாங் நதி மற்றும் வெய் நதிக் கரையையைச் சுற்றிக் குடியேறினார்கள்.பொங்கி வரும் வெள்ளத்தால் ஒரு காலத்தில் 'சீனாவின் துயரம்' என அறியப்பட்ட அதே மஞ்சள் நதி தான். இது சீனாவின் அன்னை நதி என்றும் அறியப்படுகிறது.

Image Courtesy: chinahighlights.com 

இந்த நதி தற்போதைய பெய்ஜிங்கிற்கு தெற்கில் உள்ளது. பிறகு, சீனாவின் மற்றொரு பெரிய நதியான 'தி யாங்ட்ஸ்'( The Yangtze) நதியை சுற்றிலும் பரவினர். அது தான் ஆசியாவின் நீளமான நதியாகும். இப்போதும் கூட சீனாவின் அதிக மக்கள்தொகை உள்ள பகுதி இந்த இரு நதிகளுக்கு இடைப்பட்ட இடமாகும்.

Image courtesy: chinahighlights.com
உலகம் முழுமையுமே நாகரிகங்கள் நதிக்கரைகளில் தான் செழிக்கின்றன. இங்கும் வேளாண்மை செய்ய இந்நதிக்கரைகள் உகந்தவையாக இருந்தன. அரிசியும் தினையும் முக்கிய உணவுப் பயிர்கள். நாயும், பன்றியும் வீட்டு விலங்குகள். அம்பு, கொக்கி, ஊசி, ஈட்டி முதலியவை ஆயுதங்கள்.

கற்காலத்தின் பிற்பகுதியில், மஞ்சள் நதி பள்ளத்தாக்கு தன்னை யாங்ஷாவோ கலாச்சாரத்தின் மையமாக நிறுவத் தொடங்கியது.பின்னர், லாங்ஷான் கலாச்சாரம். இது கி.மு 3000 முதல் கிமு 2000 வரை மஞ்சள் நதியை மையமாகக் கொண்டிருந்தது.

இந்தக் காலம் முழுவதும் சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல், புராணக் கதைகளால் நிரம்பியுள்ளது. அதன் படி, பாங்கு (Pangu) என்ற மிகப் பெரிய கடவுள் உலகத்தை உருவாக்கினார் என்றும் அவருக்குப் பிறகு வந்த மூன்று அரசர்கள் உலகில் ஒழுங்கைக் கொண்டு வந்தனர் என்றும் அதற்குப் பிறகு வந்தவர்கள் 'ஐந்து சக்ரவர்த்திகள்' (Five Emperors). 'மஞ்சள் சக்கரவர்த்தி' (Yellow Emperor) என்று அழைக்கப்படும் ஹுஆங்டி (Huangdi) இவர்களில் முதலாமவர். கிமு 2700 க்கும் 2600க்கும் இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்ததாக சீன மக்களால் நம்பப்படுகிறார். இவர் 'சீன மக்களின் தந்தை' என்றும் அறியப்படுகிறார்.

Depiction of Yellow Emperor 
இவர் தான் சீன மக்களை காட்டுமிராண்டி காலகட்டத்தில் இருந்து நாகரிக காலத்திற்கு கொண்டு வந்ததாக நம்பப்படுகிறார். இந்த வரிசையில் வந்த அனைவரும் தங்கள் வாரிசுகளுக்கு ராஜ்யத்தை விட்டு செல்லாமல், தகுதி பெற்ற இன்னொருவருக்கு விட்டு சென்றதாக நம்பப்படுகிறது. இவர்கள் கடவுளுக்கு நிகரான சக்தி உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். இவை புராணங்களோ, கதைகளோ அதை நாம் நம்புவதும் நம்பாததும்  இங்கு முக்கியமில்லை. சீன மக்கள் இதை முழுவதுமாக நம்பி இந்த சக்ரவர்த்திகள் மீது பெரும் மரியாதையும், தங்கள் மூதாதையர்கள் மீது பெரு மதிப்பும் கொண்டவர்கள் என்பது தான் முக்கியம்.  21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, மஞ்சள் சக்கரவர்த்தியின் நினைவாக ஜெங்ஜோவில் நடைபெரும் வருடாந்திர   மூதாதையர் வழிபாட்டு விழாவவை, பில்லியன் கணக்கான சீன மக்கள் அவரவர்கள் மூதாதையர்களை வணங்குவதற்கானப் பாரம்பரியமாக மாறியுள்ளனர்.

Quingming Festival; Image Courtesy: ChinaDaily 

இந்த ஐந்து சக்கரவர்த்திகளில் கடைசி அரசர் யு தி கிரேட் என்று அழைக்கப்படும் யு மன்னருக்கு ராஜ்யத்தை விட்டு சென்றார். இங்கிருந்து சீனாவில் மன்னராட்சி ஆரம்பித்தது என யூகிக்கப்படுகிறது. இதே சமயத்தில் கற்காலத்தில் இருந்து ஆரம்ப வெண்கலக் காலத்தில் நுழைந்தது சீனா..


References

China by Raymond C.Nelson

Ancient China- Captivating History

Chinahighlights.com
Tuesday, July 7, 2020

#KnowYourEnemy சீனாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.! அறிமுகம்.

சீனாவை நமக்கு 'எதிரி' என்று குறிப்பிட சிறு தயக்கம் இருந்தது உண்மை. இது நாள் வரை பாகிஸ்தான் அந்த இடத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருந்தது. சீனாவை நமக்கு போட்டியாக கருதியிருக்கிறோம். பாகிஸ்தானுக்கு உதவி புரிந்து வருவதாலும், 58 வருடங்களுக்கு முன் நம் மேல் போர் தொடுத்ததாலும், உலக அரங்கில் நமக்குரிய இடத்தைத் தடுக்கும் தடைக்கல்லாக இருப்பதாலும் நமக்கு எப்போதும் சீனா மேல் நல்ல அபிப்ராயமோ,நட்புரிமையோ இருந்ததில்லை. ஆனால் 'எதிரி' என்பது பெரிய பட்டம். அதை சீனா மேல் சுமத்துவது சரியா? 

பிரதமர் மோடி சமீபத்தில் லடாக்கிற்கு விஜயம் செய்த போது, நம் வீரர்களிடம் உரையாற்றினார். அப்போது 'Enemy has seen your fire and fury' என்று பேசினார். அவர் எந்த இடத்திலும் சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இங்கே 'enemy' என்று சீனாவைத் தான் குறிப்பிடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. வார்த்தைகளை மிகவும் கவனமாக பிரயோகிக்கும் நமது பிரதமர், இவ்வாறு பேசியிருப்பது இந்திய-சீன உறவுகளின் தன்மை எந்தளவு மாறிவிட்டது என்பதை விளக்குகிறது.

பாகிஸ்தானைப் பற்றி ஓரளவு நாம் புரிந்து வைத்திருக்கிறோம். 1947க்கு முன்னால் பாகிஸ்தான் நம்மில் ஒரு பகுதி என்பதாலும், அதற்கு முன்பும் பின்பும் கூட நம் தேசத்தின் வரலாறு அவர்களுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதாலும், பாகிஸ்தானுடன் நமக்கு உள்ள தெளிவு, சீனாவிடம் இல்லை. 

#KnowYourEnemy என்ற வாசகம், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவத்தின் கொள்கை பரப்புத் துறை, அமெரிக்காவின் எதிரிகளை (ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி etc) குறித்து  பொதுமக்களுக்கு எளிமையான முறையில் விளக்குவதற்கு எடுக்கப்பட்ட ஆவணப் படத்தின் பெயர் ஆகும். 

 Illustration courtesy: Eniola Odetunde/Axios

இந்தத் தொடர் கட்டுரைகளின் நோக்கம் எளிமையாகவும் சுருக்கமாகவும் சீனாவின் வரலாறு, கலாச்சாரம், நாகரிகம்,அரசியல் அமைப்பு ஆகியவற்றை விளக்குவதாகும். 

Follow by Email