Tuesday, May 26, 2020

சோமநாதர் ஆலயம்- பாரத எழுச்சியின் வரலாறு.!

அறிமுகம் 

பழமையான, செல்வ செழிப்புடன் இருந்த  நம் நாடு பலமுறை அந்நியர்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. அந்தத் தாக்குதல்களின் மையம், பெரும்பாலும் நம் கோயில்களாகவே இருந்தன. செல்வங்கள் நம் கோயில்களில் கொட்டிக் கிடந்தன என்பது ஒரு காரணமாயிருந்தாலும், கோயில்களை கொள்ளையடித்து செல்வதுடன் நிறுத்தாமல், அதை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்குவதையோ அல்லது பலத்த சேதாரம் ஆக்குவதையோ வழக்கமாகக் கொண்டிருந்தனர். அது, வெளிநாடுகளிலிருந்து படையெடுத்தவர்கள் ஆனாலும் சரி, அல்லது மொகலாய மன்னர்கள் ஆனாலும் சரி. இதற்கு முக்கிய காரணம், உருவ வழிபாட்டின் மேல் அவர்கள் கொண்டிருந்த தீவிர வெறுப்பும், இந்து மக்களின் மேல் தங்கள் 'உயற்சியை'  நிலை நிறுத்த முயன்ற சர்வாதிகாரமும் ஆகும்.

ஆனால் நம் முன்னோர்கள், சில கோயில்கள் ஒவ்வொரு முறை இடிக்கப்பட்ட போதும் மீண்டும் மீண்டும் எடுத்துக்கட்டி, செப்பனிட்டு மேலேழும்பச் செய்துள்ளனர். அது மக்கள் எழுச்சியின் ஒரு பகுதியும், இந்து அரசர்களின் தர்மமும் ஆகும். இதற்கு உதாரணமாக தெற்கில் சுல்தான்களின் ஆட்சியில் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டு, பிறகு விஜயநகர அரசரால் மீட்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலையும் கூறலாம் அல்லது மேற்கில் குஜராத்தில் பலமுறை இடிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் இன்றும் கம்பீரமாக எழும்பி நிற்கும் சோமநாதர் ஆலயத்தையும் கூறலாம். பாரத எழுச்சியின் வரலாறு இவையில்லாமல் நிறைவு பெறாது. இக்கட்டுரையில், சோமநாதர் ஆலயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

சோமநாதர் ஆலயம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? மறுபடியும் மறுபடியும் அது ஏன் தாக்கப்பட்டது? மறுபடியும் மறுபடியும் அது ஏன் கட்டப்பட்டது? இந்தியாவில் உள்ள கோயில்களில் இது ஏன் தனித்துவம் வாய்ந்தது? மற்ற சிவன் கோயில்களை விட இது எந்த விதத்தில் வித்தியாசமானது? 

சோமநாதர் ஆலயம்:தல வரலாறு

சோம்நாத் அறக்கட்டளையின் வலைதளத்தில் உள்ள தகவல்களின் படி, முதல் சோமநாதர் ஆலயம் பத்தாவது த்ரேதா யுகத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதாவது 7,99,25,105 ஆண்டுகளுக்கு முன்பு.

Somnath Temple 

புராணக்கதைகள் படி, தனது 27 மனைவியருள் ஒருவரான ரோஹிணியிடம் மட்டும் அதிகம் அன்பு காட்டியதால் தனது பொலிவை இழக்கும் படி சபிக்கப்பட்ட சந்திரன், அச்ச்சாபத்தை போக்க ,பிரபாஸ் தீர்ததம் இருக்கும் இடத்திற்கு சென்றும், மூன்று நதிகளும்  சங்கமிக்கும் இடத்தில் குளித்த பிறகு சிவபெருமானை வழிபடுமாறு கூறினார் பிரம்மதேவர். அதன்படியே செய்து அச்சாபத்தில் இருந்து விடுபட்ட சந்திரன், நன்றியின்  அடையாளமாக சிவபெருமானுக்கு அங்கு ஒரு கோயில் எழுப்பினார்.அதுவே சோமநாதர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இதை தங்கக்கோவிலாக சந்திரன் கட்டியதாகவும், இங்கே பூஜைகள் செய்ய சோமபுர பிராமணர்களை இதற்காகவே உருவாக்கியதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. 

மேலும், முதலில் சந்திரனால்கட்டப்பட்ட  தங்கக்கோயிலாக இருந்ததாகவும், பிறகு ராவணன் வெள்ளிக்கோயில் கட்டியதாகவும்,துவாபர யுகத்தில் கிருஷ்ணா பகவான் இதை மரக் கோயிலாகக் கட்டியதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன.

சோமநாதர் கோயிலில் உள்ள லிங்கம் ஜோதிர்லிங்கம் வகையறாவில் முதன்மையானது. இது போன்று இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கம் உள்ள கோயில்கள் உள்ளன. (தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயமும் இதில் ஒன்று)


Image Courtesy: Myoksha Travels 

கோயில் வரலாறு 

குஜராத்தில் பிரபாஸ் தீர்த்தத்திற்கு அருகில், முதல் சோமநாதர் கோயில் முதலாம் நூற்றாணடில் கட்டப்பட்டு இருக்கலாம். அந்தக் கோயிலின் எந்த அமைப்பு மிச்சங்களும் கண்டறியப்படவில்லை. இரண்டாம் கோயில் 7வது நூற்றாண்டை சேர்ந்தது. யாதவர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் அந்தக் கோயில் அல் ஜுனாய்டு என்ற அரபி ஆளுநரால் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டது. 

மூன்றாவது முறையாக பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட  சோமநாதர் கோயில் 1026ல் முஹம்மது கஜினியால் தாக்கப்பட்டது.பெரும்பாலும் தகவல்கள் பெர்சியன் மற்றும் அரபி பயணிகளால் எழுதப்பட்ட புத்தகங்களிடமிருந்து  பெறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பயணி எழுதிய 'Wonders of  Creation' என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தில் இப்படையெடுப்பு மற்றும் சோமநாதர் ஆலயத்தைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது கஜினி அக்கோயிலை கைப்பற்றுவதற்காக  கிட்டத்தட்ட 50,000 பேரை கொன்று குவித்ததாகவும், கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களின் மதிப்பு இருபதாயிரம் தினாரைத் தாண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அல்பெரூணியின் படி, அக்கோயிலில் இருந்த சிவலிங்கம் இரண்டாக உடைக்கப்பட்டு ஒன்று தூக்கி வீசப்பட்டதாகவும், மற்றொன்று அதே ஊரில் இருந்த மசூதியின் வாசலில் கால்களைத் துடைக்கும் பாறையாக உபயோகப்படுத்தப்பட்டதாக கூறுகிறார். 

சிலகாலத்திற்கு பிறகு கோயில் மறுபடியும் கட்டப்பட்டது. 1298ம் ஆண்டில் சோமநாதர் ஆலயம் மறுபடியும் அலாவுதீன் கில்ஜியின் படைகளால் தாக்கப்பட்டது. பார்னி என்பவரின் படி, லிங்கம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டு அனைவரும் அதன் மீது ஏறி நடக்கும்படி செய்யப்பட்டது. சில காலத்திற்கு பிறகு கோயில் மறுபடியும் ஜூனாகாத் அரசரால் கட்டப்பட்டது. சிறிது காலம் கழித்து முஸாபார் கானின் படைகள் மறுபடியும் கோயிலை தாக்கின. ஆனால் இம்முறை கோயிலை இடிக்காமல் அதற்குள்ளே ஒரு மசூதியைக் கட்டி விட்டு சென்றார்கள். கோயிலில் வழிபாடு தடைபட்டது.

1413ல் சுல்தான் முஹம்மது ஷாவும், 1469ல் அவரது பேரன் முஹம்மது பெஹதாவும் லிங்கத்தை முழுவதுமாக அகற்றி அதை முழுக்க முழுக்க மசூதியாக்கினார்கள்.மொகலாய மன்னர் அவ்ரங்கசிப்பின் உத்தரவின் பேரில் 1701ல் கோயில் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டது.

மஹாராணி அஹில்யா பாய் தோல்கர் 1783ல் இந்தக் கோயிலுக்கு அருகில் புதிதாய் ஒரு சோமநாதர் ஆலயத்தைக் கட்டினார். நம் நாடு விடுதலையடைந்த பிறகு தான் மசூதி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு அதன் மேலே புதிய சோமநாதர் ஆலயம் கட்டப்பட்டது. இதற்கு பெரிதும் அடிகோலியவர் சர்தார் வல்லபாய் படேல் ஆவார்.அன்றைய பிரதமர் நேரு இதை ஹிந்து எழுச்சியாகப் பார்த்து இதை விரும்பாதது மட்டுமல்லாமல், இதன் கும்பாபிஷேகத்திற்கு அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தை கலந்து கொள்ள வேண்டாமென்று அறிவுறுத்தினார். ஆனால் அதை மீறி ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டார். மே 11,1951 ல் இப்போதிருக்கும் சோமநாதர் ஆலயம் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது.


Image Courtesy: WikiWand

இப்போதிருக்கும் ஆலயம் சாளுக்கிய கட்டடக்கலையை பின்பற்றி அழகாகவும் கம்பீரமாகவும் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்தவர்
பிரபாசங்கர் ஓகட்பாய் என்பவர் ஆவார்.

சோமநாதர் ஆலயம் பல அழிவுகளுக்கு உள்ளான வரலாறு சோக மயமானது என்றாலும், அதைப் பாதுகாக்க ரத்தம் சிந்திய ,உயிர் விட்ட பலரின் வீரமும் தியாகமும் நம் மனத்தைத் தொடும். அப்படிப்பட்ட ஒருவர் வீர் ஹாமிர்ஜி, சிறிது நாட்களுக்கு முன்பு திருமணமான அவர் சோமநாதர் கோயில் தாக்கப்படுகிறது என்று அறிந்து சிறிதும் தாமதிக்காமல், அதைக் காக்க சென்றார். நடைபெற்ற சண்டையில் அவர் தலை துண்டிக்கப்பட்டது. ஆனாலும் அவர் முண்டம் சில நாழிகைகள் அதிகமாக சண்டையிட்டது என்று கூறப்படுகிறது. இவரின் வீரத்தை போற்றும் வகையில் கோவிலுக்கு சில மீட்டர்களுக்கு முன்னால் அவர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

Image courtesy: Mapio.net
''சர்தார் வல்லபாய் படேல் மட்டும் இல்லையென்றால் என்னுடைய கண்கள் மகிமைமிக்க சோமநாதர் ஆலயம் எழுப்பப்படுவதைப் பார்த்திருக்காது" என்று K.M. முன்ஷி "Somanatha- The Shrine Eternal" என்ற புத்தகத்தில் படேலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்தியாவின் சுதந்தரத்திற்குப் பிறகும் சிதிலடைந்து கிடந்த சோமநாதர் ஆலயத்தை மறுபடியும் எழுப்பியதில் வல்லபாய் படேலின் பங்களிப்பைப் பற்றி இந்த ஒரு வரியில் தெரிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட 17 முறை தாக்கப்பட்ட சோமநாதர் கோயில் தற்போது கம்பீரமாக எழும்பி நிற்கிறது. அதைத் தாக்கியவர்கள் எல்லாம் மண்ணோடு மன்னாக உலகின் எதோ ஓர் மூலையில் மறக்கப்பட்டு மடிந்தார்கள். 

Sunday, May 10, 2020

இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன? -பாகம் இரண்டு

முதலில் இதைப் படிக்கவும்.

இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் நடந்தது என்ன? -பாகம் ஒன்று


அறிமுகம்"நான் இந்தியர்களை வெறுக்கிறேன். அவர்கள் மிருகத்தனமான மதத்தை கொண்ட மிருகத்தனமான மக்கள். அங்கே பஞ்சம் ஏற்பட காரணம் அவர்கள் முயல்களை போல் இனப்பெருக்கம் செய்வதே ஆகும்"

வின்ஸ்டன் சர்ச்சில்


இங்கிலாந்து பிரதமர் (1940-45)


இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷார் மற்றும் அதன் கூட்டாளிகளின் (allies) வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பாகம் ஒன்றில் பார்த்தோம். அந்தப் போரின் போது இந்தியாவிற்கு கிடைத்த சொல்லொணா துயரங்களில் முக்கியமானது, 1943ல் செயற்கையாக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பெங்கால் பஞ்சம் ஆகும். கிட்டத்தட்ட 30 லட்சம் பேரின் உயிரைக் குடித்த இந்தப் பஞ்சத்தைக் குறித்து நமது பாடத்திட்டங்களில் அதிகம் இல்லை. அதைப் பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.அதன் காரணிகள், விளைவுகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

பெங்கால் பஞ்சம் 1943 காரணிகள்


மழைக்காலம் பொய்த்ததினால்  அந்த பஞ்சம் உண்டாகவில்லை மழைப்பொழிவு வழக்கத்தை விட அந்த வருடம் அதிகமாகவே இருந்தது ஆங்கிலேயே அரசின் தவறான கொள்கை முடிவுகள் மற்றும்  அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட பேரழிவு அது.


மியான்மர் (அப்போதைய பர்மா) ஜப்பானியர்களிடம் வீழ்ச்சி அடைந்த போது அங்கிருந்து வந்து கொண்டிருந்த அரிசியின் இறக்குமதி தடைபட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு கொண்டிருந்தன இதன் மூலம் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் என்று பலமுறை இந்தியாவின் வைசிராய் லண்டனை எச்சரித்த போதும் இங்கிலாந்து அரசாங்கம் அதனைப் புறக்கணித்தது.


இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு படி மேலே போய் அவ்வளவு பஞ்சம் இருப்பது உண்மையானால் காந்தி ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.


ஜப்பானியர்கள் எந்நேரமும் வங்காளத்திற்குள்  ஊடுருவலாம்  என்ற பயத்தில் வங்காளத்திற்கு சென்ற கப்பல்களில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் ஆங்கில அரசாங்கம் பறிமுதல் செய்தது. ஆங்கில ஆட்சியின் கீழ் பலமுறை பஞ்சத்தை சந்தித்திருக்கிறது வங்காளம்.(1770,1783, 1866, 1773, 1892, 1897, 1943- 44.)


இதற்குமுன் பஞ்சம் வந்த போதெல்லாம் அப்போது ஆட்சிக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த உள்ளூர் அரசர்கள் விரைவாக நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்தியும், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தும் பஞ்சம் தீவிரம் அடையாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் முதன்முறையாக மழைக்காலம் பொய்க்காமல் உள்ளூர் தானிய உற்பத்தியில் குறைவு ஏற்படாமல் முழுக்க முழுக்க உலகப்போரின் காரணமாகவும், இந்தியர்களின் உயிர்களின் மேல் கொண்டிருந்த தீவிர அலட்சிய போக்கினாலும் ஆங்கிலேயே அரசாங்கம் உணவுப் பொருட்களை வேறு நாடுகளுக்கு திருப்பிவிட்டதோடு அல்லாமல் வங்காளத்திற்கு வந்த உணவு பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தது.


பெங்கால் பஞ்சம் விளைவுகள்:


 சாலைகளில் மக்கள் செத்து விழுந்த போது கூட அதை உலகப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டிய போது கூட ஆங்கிலேயே அரசாங்கம் கொஞ்சமும் அசரவில்லை. அமெரிக்கா,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கப்பல்களில் உணவுப்பொருட்கள் அனுப்பி வைப்பதாக உதவிக்கரம் நீட்டிய போது கூட அதை அவமானமாக கருதி ஆங்கிலேய அரசாங்கம்  தடுத்து விட்டது.ஒன்றல்ல இரண்டல்ல 30 லட்சம் பேரின் உயிரை அந்த பஞ்சம் குடித்தது. மக்கள் எலும்புக்கூடுகளைப் போல சாலைகளில் திரியும் புகைப்படங்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இவ்வளவு பெரிய பஞ்சத்திற்கு காரணமாய் இருந்தும்கூட அதற்கு காரணம் முழுக்க முழுக்க உலகப்போர் என்பது போலவும் ஆங்கிலேய அரசின் தவறான கொள்கை முடிவுகள் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்பது போலவும் அவர்கள் இதை மூடிமறைக்க பார்த்தனர். பஞ்சம் வந்து முடிந்து ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஆராய்ச்சிகள் பஞ்சம் முழுவதும் தவிர்த்திருக்கக் கூடிய ஒன்றே என்றும் ஆங்கிலேய அரசின் மெத்தனப் போக்கே இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன. 

Thursday, May 7, 2020

இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன ? - பாகம் ஒன்று

அறிமுகம் 

இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு உலக அளவில் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டு , ஒதுக்கி விடப்படுகிறது. ஏன், இந்தியாவில் கூட அதைப்பற்றிய விழிப்புணர்வோ, தகவல்களோ மிகக் குறைவு. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விவரிக்கும் பள்ளிப் பாடத்திட்டங்கள் கூட, இரண்டாம் உலகப் போரை சில வரிகளில் கடந்து விடுகின்றன. (ஒன்றரை கோடி பேரை இந்தியாவில் பலி வாங்கிய ஸ்பானிஸ் ஃப்ளுவிற்கு அந்த சில வரிகளும் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்

இந்தியாவிற்கு எவ்விதத்திலும் தொடபில்லாத ஒரு போரில், நம் நாட்டு இராணுவ வீரர்கள் 85,000 பேர் உயிரிழந்தனர் என்பது பலருக்கு ஆச்சர்யமான செய்தியாக இருக்கலாம். நம்மை அடிமைப் படுத்தி ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயருக்கு ஆதரவாக  இந்தியன் பிரிட்டிஷ் ஆர்மியில் சேர்ந்து ( சில சமயங்களில் வற்புறுத்தப்பட்டு அல்லது பிழைக்க வேறு வழியின்றி )  ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளை எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருந்த நம் நாட்டிற்கு பிரிட்டிஷ் பரிசளித்தது என்ன தெரியுமா? வங்காளத்திலும் இன்னும் சில மாகாணங்களிலும், செயற்கையாக, மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கொடிய பஞ்சம். 30 லட்சம் பேரின் உயிரைக் குடித்த பஞ்சம்.

இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. அவற்றைப் பற்றி சுருக்கமாகப் பாப்போம்.

இரண்டாம் உலகப் போர்  

1939ல் பிரிட்டிஷ் மற்றும் அதன் கூட்டாளிகள் ( Allied ), நாஜி (Nazi ) ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு (Axis) எதிராக போர் அறிவித்தனர். இந்தியாவில் அப்போது தேர்தல் வைத்து , தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த எந்த உள்ளூர் அரசாங்கத்திடமும்  கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக இந்தியாவும் போரில் ஈடுபடுவதாக பிரிட்டிஷார் அறிவித்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அதைக் கடுமையாக  எதிர்த்தனர். நாஜி ஜெர்மனியை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் ஆனால் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்காமல் யாருக்கும் ஆதரவாகவும்,எதிராகவும் போர் புரிய முடியாது என்பது அவர்கள் நிலையாக இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் விடுதலை தர மறுத்து விட்டது. இந்தியன் முஸ்லீம் லீக் பிரிட்டிஷாரின் போர் முயற்சிகளை ஆதரித்தனர்.

இந்தியாவின்  இயற்கை வளங்களும், மனித வளங்களும் ஆங்கிலேயருக்கு போர் சமயத்தில் மிகவும் தேவையாய் இருந்தது. பிரிட்டிஷ் இந்தியன் இராணுவத்தில் ஆள் சேர்ப்பு தீவிரமாய் இருந்தது. தன்னார்வலர் சேர்ப்பு என்று பெரியரளவில் இருந்தாலும் , பல மோசமான  யுக்திகளையும்  கையாண்டு ஆள் சேர்த்தார்கள். முஸ்லீம் லீக் தாராளமாகவே ஆட்களை சேர சொன்னார்கள். போரின் முன்பு இரண்டு லட்சமாய் இருந்த இராணுவ வீரர்கள் எண்ணிக்கை, 1940ல் பத்து லட்சமாய் உயர்ந்து 1945ல் (போரின் முடிவில்)  25 லட்சம் வரை உயர்ந்தது.
முன்னாள் காங்கிரஸ் தலைவராயிருந்த சுபாஷ் சந்திர போஸ் , ஜப்பான், ஜெர்மனிக்கு ஆதவளித்து அவர்கள் மூலம் பிரிட்டிஷாரை தோற்கடிக்க எண்ணினார்.  இந்தியாவிற்கு அதன் சொந்த உரிமைகளை மறுத்து காலனி நாடாக வைத்திருக்கும் பிரிட்டிஷ், ஜெர்மனியின் நாசிசம் பற்றி பேசுவது பெரும் பாசாங்குத்தனம் என்றார். ஜப்பானியர்களிடம் உதவி கேட்டு சென்ற அவரிடம், சிங்கப்பூரில் பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மியில் சேர்ந்து சண்டையிட்டு,தோல்வியடைந்து  ஜப்பானியர்களிடம் சரணடைந்த இந்தியப் போர்க் கைதிகள் அவர்களின் விருப்பத்துடன் ஒப்படைக்கப்பட்டனர். (கிட்டத்தட்ட 30000 பேர்) அவர்களை உள்ளடக்கி உருவானது தான் இந்தியன் நேஷனல் ஆர்மி ( INA )

1942ல் இந்திய தேசிய காங்கிரஸ் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை தொடங்கியது . விடுதலை கிடைக்கும் வரை ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று போராடினர். அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு 1945 வரை வெளியே விடப்படவில்லை. 60,000க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியன் முஸ்லீம் 'லீக் வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நிராகரித்தது. பிரிட்டிஷாருக்கு ஆதரவளித்தது.

இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்களிப்பு.

ஆங்கிலேயர்களின் படை நிலைமை மிக மோசமாய் இருந்தது. ஜெர்மனியர்களிடம் கேவலமாகத் தோற்றுக்  கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மி, ஜெர்மனியர்களை எதிர்த்து ஆப்பிரிக்காவில் வீரமாக  சண்டையிட்டது. ஜப்பானியர்கள் படையெடுத்து வந்த போது  அவர்களை பர்மாவிலும், மலேசியா,சிங்கப்பூரிலும் எதிர்த்து போராடியது. அச்சமயங்களில் ஜப்பானியர்களைக் கண்டதும் ஆங்கிலேயர்கள் பயந்து , தப்பித்து இந்தியாவிற்கு வந்து ,நம்முடைய வீரர்களை சண்டையிட அனுப்புவார்களாம். (மலேயாவும் பிரிட்டிஷாரின் காலனி நாடுகளில் ஒன்று)

ஜப்பானியர்கள் பர்மாவைக் (தற்போதைய மியான்மர் ) கைப்பற்றி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் கைப்பற்றினர். இந்தியாவிற்குள் அவர்கள் ஊடுருவிய போது (தற்போதைய மணிப்பூர், அசாம், 1944) பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மி மிகக் கடுமையாக  சண்டையிட்டு அவர்களை தோற்கடித்து பர்மாவிற்குள் மிகுந்த சேதாரங்களுடன் விரட்டியடித்தது

பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மி எதிர்த்து சண்டையிட்டது ஜப்பானியப் படைகளை மட்டுமல்ல, சுபாஷ் சந்திர போஸின் இந்தியன் நேஷனல் ஆர்மி (INA) யின் படைகளையும் சேர்த்து தான் என்பது உபரி செய்தி. இது Battle of Kohima and Imphal என அழைக்கப்படுகிறது. உலக வரலாற்றின் ராணுவப் போர்களில் மிகக் கடுமையான போர்களில் (battle) ஒன்றாகவும் , ஜப்பானியர்களால்  தங்களுடைய  மிகப் பெரிய தோல்வியாகவும் இது கருதப்படுகிறது. 
பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மியில் மோசமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.இரண்டாம் உலகப்போரில்  கிட்டத்தட்ட 85,000 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியாவின் உதவியின்றி பிரிட்டிஷாரால் கண்டிப்பாக போரில் தாக்குப்பிடித்திருக்க முடியாது.1945 ல் Allied படைகள் ஜெர்மனிக்குள் நுழைந்து ஜெர்மனியைக் கைப்பற்றியன.
1945ல் ஜப்பான் இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு சரணடைந்தது. 

 இராணுவ வீரர்கள் தவிர, இந்தியாவில் ஒன்றரை கோடி பேர், போர் சம்பந்தமான தொழிற்சாலைகளில் இரவும் பகலுமாக உழைத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து கரி, மரம், பருத்தி, உணவு, இரும்பு ,சிமெண்ட், தோல் பொருட்கள் உற்பத்தியில் பெரும்பாலானவை போர்த் தேவைகளுக்காக (வலுக்கட்டாயமாக) அனுப்பி வைக்கப் பட்டன. 

இவ்வளவு வளத்தையும் சுரண்டி உபயோகப்படுத்திக் கொண்டு, இந்நாட்டு மக்களையே பட்டினி போட்டு லட்சக்கணக்கில் சாகடித்த பெருமையும் ஆங்கிலேயரையே சாரும். கேட்டால் இரத்தம் கொதிக்கும் அந்த விவரங்கள் பாகம் இரண்டில். Monday, May 4, 2020

தஞ்சைப் பெரிய கோயில் - ஒரு தெய்வீக வரலாறு

அறிமுகம் 

உலக வரலாற்றில் எவ்வளவோ சாம்ராஜ்யங்கள் தோன்றி,வளர்ந்து,புகழடைந்து பிறகு சிறிது காலத்தில் எந்த  அடையாளங்களும்  இல்லாமல் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. 

ஆனால் சில வரலாற்றுச் சின்னங்கள், அம்மன்னர்களின் புகழுக்கு மட்டுமல்ல, அந்நாட்டு மக்களின் திறமைக்கும், உழைப்பிற்கும்,வெற்றிக்கும்,கலை உணர்விற்கும் காலங்களைக் கடந்து சான்றாக நிற்கின்றன. 

இக்கட்டுரையில் அத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலின் சுருக்கமான வரலாற்றையும், இத்திருக்கோயில் பெற்றிருக்கும் மகத்துவத்தையும் காண்போம்.
தஞ்சைப் பெரிய கோயில் யாரால், எப்போது  கட்டப்பட்டது?

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு , தமிழகத்தில் சோழ ராஜ்யத்தை ஆட்சி புரிந்த தமிழ் மன்னர் முதலாம் இராஜ ராஜ சோழனினால், கி.பி.1004 ல் சிவ பெருமானுக்காக இந்தக் கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
இராஜ ராஜ சோழனின் ஆட்சியின் பத்தொன்பதாவது வருடத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, இருபத்தைந்தாவது ஆண்டில் வழிபாட்டிற்குத்  திறந்துவிடப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்த கோயிலிற்கு 'இராசராஜீச்வரம்' என்ற பெயர் சூட்டப்பட்டதாக கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. பொதுமக்கள் இக்கோயிலை  'பெருவுடையார் கோயில்' எனவும் 'பெரிய கோயில்' எனவும் வழங்கலாயினர்.

கோயிலின் அமைப்பு:

உயரமான மேடை (அ) நிலப்பரப்பில் எழுப்பப்படும்
கோயில்களை 'மாடக்கோயில்' என்று கூறுவர். தஞ்சைப் பெரிய கோயில் மாடக்கோயில் அமைப்பை சார்ந்தது. பெரிய கோயிலின் நீளம் 241.51மீ (793 அடி), குறுக்களவு 125.218 மீ (397 அடி). 
விமானம் 

கருவறையின் மேல் இருக்கும் விமானம் பதிமூன்று மாடிகளை உடையது. பிரமிட் போன்ற அமைப்புடைய சதுர வடிவமானது. அந்த விமானத்தின் உயரம் 66 மீ (216 அடி). 
கோயில் விமானங்கள் மேரு, மந்தரம்,கைலாசம், நந்தனம், பத்மம், கருடம்,குஞ்சரம்,இடபம் உள்ளிட்ட 20 வகைப்படும். இக்கோயிலின் விமானம் தட்சணமேரு எனப்படுவதாகும். அதாவது தென்னாட்டில் உள்ள மேரு மலையைப் போன்ற அமைப்புடையது. இதனால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு 'தட்சண விடங்கர்' என்ற பெயரும் உண்டு.


அதன் உச்சியில் இருப்பது ஒரே கருங்கல் எனக் கூறப்படுகிறது.அனால் அவை ஆறு கற்கள் என்று தெரிகிறது. அவை  7.77 மீ (25 1/2 அடி சதுரம்) நீளமும், 80 டன் நிறையும் உடையது. அக்கல்லின் மேலே கலசமும்,தூபியும் அமைக்கப் பெற்றுள்ளன.
விமானத்தின் மேலுள்ள செப்புக் குடம் 339.55 கி.கி  நிறையுடையது. அந்தக் குடத்தின் மேலுள்ள பொன் தகடு 1902 சவரன் எடையுள்ளது.
வாசல்கள் 

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. முதல் கோபுர வாசலுக்கு 'கேரளாந்தகன்' (சேரர்களுக்கு யமன்) என்று பெயர். இரண்டாவது கோபுர வாசலை 'இராசராசன் திருவாசல்' என்பர். மூன்றாவதாக உள்ளது கோயிலின் உள்வாயில். இதைத் 'திருவணுக்கன் திருவாயில்' என்பர்.
நந்தி 

வாசல்களைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு மேடை இருக்கிறது. அதில் ஒரே கல்லினால் ஆன மிகப் பெரிய நந்தி அமர்ந்திருக்கிறது. சேவப்ப நாயக்கரால் , நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இந்த நந்தி 3.66 மீ (12 அடி) உயரமும், 5.94 மீ (19 1/2 அடி) நீளமும், 2.51 மீ (8 1/4 அடி) அகலமும் உடையது. இந்நந்தி இந்தியாவிலுள்ள பெரிய நந்திகளில் இரண்டாவதாகும்.
எழுந்தருளியுள்ள தெய்வங்கள் 


லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் லிங்கம் 8.7 மீ (29 அடி) உயரமுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய லிங்கங்களில் இது ஒன்றாகும்.
இராச ராச சோழன் தஞ்சை பெரிய கோயிலில் , ஆடவல்லர், தட்சண மேரு விடங்கர், தஞ்சை விடங்கர், சண்டேசுவர பிரசாத தேவர், சுப்பிரமணியர், பிள்ளையார், கணபதியார் உள்ளிட்ட 20 திருமேனிகளை அறக் கொடையாக வழங்கினார்.

அவரது தமக்கை குந்தவையார், ஆடவல்லார் நம்பிராட்டியார் உமா மகேசுவரி, தட்சிண மேரு விடங்கர் உமா மகேசுவரி உள்ளிட்ட பல திருமேனிகளை அறக்கொடையாக வழங்கினார்.

இன்னும் பல சைவப் பெரியார்களின் (அப்பர்,சுந்தரர்,சம்பந்தர் உட்பட ) திருமேனிகளும் உள்ளன.

கோயில்களின் பணிகள் 

கோயில்கள், சமுதாயத்தின் பல்வேறு பணிகளுக்கும் தலைமை மன்றமாக செயல்பட்டது. தொழில் நிலையமாக செயல்பட்ட கோயில்கள் , தச்சர்கள்,சிற்பிகள், பொற்கொல்லர்கள், பூஜை செய்பவர்கள் முதல் பூமாலை தொடுப்பவர்கள், விளக்குக்கு எண்ணெய் ஊற்றுபவர்கள் வரை பல தரப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையும்,தொழிலையும் அமைத்துக் கொடுத்தன.

ஊரில் பலதரப்பட்ட மக்களும் கலந்து பேசும் பொதுமன்றமாக செயல்பட்டன. பத்திரங்களைப் பதிவு செய்யும் பதிவாளர் அலுவலகமாகவும், ஊராட்சி மன்றங்கள் செயல்படும் இடமாகவும் கோயில்கள் செயல்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கோயில்களுக்கு வரும் பொன்னையும் , அரசர்கள் வழங்கும் அறக்கட்டளை மானியங்களைக் கொண்டும் கோயில்கள், கல்வி நிலையங்களையும் ,வேத பாடசாலைகளையும், நூல் நிலையங்களையும், மருத்துவமனைகளையும், நாடக சாலைகளையும், விரிவுரை மண்டபங்களையும், ஆவணக் காப்பகங்களையும் , பழம் பொருள் காட்சி சாலைகளையும் இன்ன பிற சமுதாயக் கூடங்களை நடத்தி வந்ததும் தெளிவாகிறது.

மக்களின் வாழ்க்கை முறையுடன் கோயில்கள் பன்னெடுங்காலமாக பின்னிப் பிணைந்து  வந்துள்ளன.

தஞ்சை பெரிய கோயில்,இன்னும் இரண்டு கோயில்களுடன் சேர்த்து 'World Heritage Site' ஆக UNESCO அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சோழர்களின் வாழ்க்கை முறைமைக்கும் ஆயிரம் ஆண்டுகளாக சான்றாய் வானுயர்ந்து நிற்கிறது தஞ்சைப்  பெரிய கோயில்.


Posted by Saffron Mom 

Read Previous Post : Spanish Flu Pandemic (1918-1920)
Sunday, May 3, 2020

Spanish Flu Pandemic (1918-1920)


அறிமுகம்            

Influenza என்பதன் சுருக்கமே Flu என்பதாகும். Flu என்பது, ஒரு வைரஸ் சுவாச உறுப்புகளைத் தாக்கும் போது ஏற்படும் காய்ச்சல் ஆகும். தும்மும் போதும் இருமும் போதும் வெளிவரும் நீர் திவலைகள் மூலம் பரவுகிறது.

ஆங்கிலேய காலனி ஆட்சியின் கீழ் அப்போது இருந்த இந்தியாவில் ஸ்பானிஷ் ஃப்ளுவின்  (Spanish Flu)கொடூரம் மிக அதிகமாக இருந்தது.

'பம்பாய் காய்ச்சல்' (Bombay Influenza) என்று அப்போது அறியப்பட்ட இந்த தொற்று,பிரிட்டிஷ் போர்க்கப்பல்களின் மூலம் பாம்பே வந்த ராணுவ வீரர்கள் மூலம் இந்தியாவிற்குள் வந்திருக்கலாம்.மூன்று அலைகளாக பரவிய இந்தத்  தொற்று இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 1.2 கோடி முதல் 1.7 கோடி பேரை (அப்போதைய நமது மக்கள் தொகையில் 5% ) பலிவாங்கியது. உலக அளவில் ஸ்பானிஷ் ஃப்ளுவினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவில் தான் பலி எண்ணிக்கை அதிகம். ஸ்பானிஷ் ஃப்ளு   20 முதல் 40 வயதுடையோரை அதிகமாக பாதித்தது. 

உலக அளவில் மொத்தம் கிட்டத்தட்ட 50 கோடி பேரை பாதித்து, 5 கோடி பேரை பலி வாங்கியது. இதில் இந்தியாவில் மட்டும் உயிரிழந்தவர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர்.


காந்தியையும் பாதித்த இந்த தொற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை வேகப்படுத்தியது.

எங்கே உருவானது ஸ்பானிஷ் ஃப்ளு ?

பிரான்ஸ்,அமெரிக்கா,சீனா,இங்கிலாந்து என எங்கு வேண்டுமானாலும் ஸ்பானிஷ் ஃப்ளு உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் யூகிக்கிறார்கள். இதில் தெளிவில்லை. 1918ல் ஐரோப்பாவில் உறுதி செய்யப்பட்ட இந்த காய்ச்சல் சில மாதங்களில் அமெரிக்கா,ஆசியா என உலகம் முழுமைக்கும் பரவியது.

ஏன் ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்படுகிறது?

நிறைய பேர் நம்புவது போல், ஸ்பானிஷ் ஃப்ளு ஸ்பெயின் நாட்டில் உருவாகவில்லை.முதல் உலகப்போர் (1914-1918) நடந்து கொண்டிருந்த காரணத்தினால் உலகின் பல நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் முடக்கப்பட்டு,தணிக்கை செய்யப்பட்டு இருந்தது. ஸ்பெயின் நாடு எந்த விதப்  போரிலும் கலந்து கொள்ளாமல் தனித்திருந்து. எனவே 1918ல் ஸ்பெயினில் காய்ச்சல் வந்த செய்திகள் மறைக்கப்படாமல் வந்து கொண்டிருந்தன.

சில வாரங்களில் ஸ்பெயின் மன்னர் அல்போன்சா XIIIவிற்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்ட போது அது தலைப்புச்  செய்தியாகியது.இதனால் ஸ்பானிஷ் ஃப்ளு உருவாகிய இடம் ஸ்பெயின் என்று தவறாக புரிந்து கொள்ளப் பட்டு உலகம் முழுவதும் அத்தொற்று ஸ்பானிஷ் ஃப்ளு என்றழைக்கபட்டது.ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் அந்த தொற்று பிரான்சிலிருந்து வந்ததாக நம்பி,அதை பிரெஞ்சு ஃப்ளு (French flu)  என்றே அப்போது அழைத்தனர்.


ஸ்பானிஷ் ஃப்ளு எவ்வாறு பரவியது?

மார்ச் 1918ல் முதன் முதலாக இந்த தொற்று உருவாகிய போது ,வழக்கமாக வருடா வருடம் வரும் தொற்று (seasonal flu) போலவே இருந்தது.அமெரிக்காவில் கான்சாஸ் மாகாணத்தில் Albert Glitchell என்ற ராணுவ சமையல்காரருக்கு 104 டிகிரி காய்ச்சலுடன் தொற்று ஏற்பட்டது.

54,000 வீரர்களைக் கொண்ட அந்த இராணுவக் குடியிருப்பில் வெகு விரைவாகப் பரவியது.அம்மாத இறுதியில் 1100 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,38 பேர் உயிரிழந்தனர்.முதல் உலகப் போருக்காக ஐரோப்பா சென்றிருந்த அமெரிக்க வீரர்கள் நோய்த் தொற்றுதலுடன் அமெரிக்காவிற்கு திரும்பி சென்றனர்.1918 ஏப்ரல்,மே யில் தொற்று இங்கிலாந்து.ஸ்பெயின்,பிரான்ஸ்,இத்தாலியில் காட்டுத்தீ போல பரவியது.

75% பிரான்ஸ் ராணுவமும்,50% பிரிட்டிஷ் ராணுவமும் பாதிக்கப்பட்டது. எனினும் முதல் அலையான இந்த பரவலில் உயிரிழப்பு அதிகம் ஏற்படவில்லை.

ஆகஸ்டில் மிகக் கொடிய இரண்டாம் அலை பரவ ஆரம்பித்தது. 1918 ஆகஸ்டில் இங்கிலாந்து Plymouth துறை முகத்தில் இருந்து இந்நோயால் பாதிக்கப்பட்டதை அறியாத வீரர்கள் பிரான்ஸ்,அமெரிக்கா,ஆப்பிரிக்காவிற்கு சென்றனர். இரண்டாம் அலை உலகம் முழுவதும் பரவ தொடங்கியது.

இம்முறை, தொற்று ஆரோக்கியமான இளம் வயதினரைக் கூட கொன்று குவித்தது. சில சமயங்களில் தொற்று ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குள் கொன்று விடும் அளவுக்கு வலியதாய் இருந்தது.

ராணுவ வீரர்கள் உலகப் போர் காரணமாக பெரும் அளவில் நாடுகளை விட்டு நாடுகளுக்கும் , வேறு வேறு கண்டங்களுக்கும் கூட்டம் கூட்டமாக பிரயாணம் செய்ததே இதற்குக்  காரணமாகும்.

ஊரடங்கின் மூலமும், மக்களை தனிமைப்  படுத்துவதின்  மூலமாகவும் இப்பரவலை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றாலும் உலகப் போரின் காரணமாக அவை சாத்தியப்படவில்லை.

1918 டிசம்பரில் இரண்டாம் அலை ஓய்ந்தது. மீண்டும் மூன்றாம் அலை 1919 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் உருவாகி மறுபடியும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சென்றடைந்தது .

இரண்டாம் அலையை விட இது எவ்விதத்திலும் குறைவில்லை. எனினும் உலகப் போர் முடிந்து விட்டபடியால் பரவலைக்  கட்டுப்படுத்த முடிந்தது.

உலகம் எதிர்கொண்ட விதம் 

அக்காலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்துகளோ, தடுப்பு மருந்தோ இல்லை. வைரஸை நுண்ணோக்கியால் பார்ப்பது கூட 1930களில்தான் கண்டறியப்பட்டது. இதை பாக்டீரியா உருவாக்குவதாகவே பலர் நம்பினார்கள்.

இந்தியாவில் பாம்பேயை  மையமாகக் கொண்டு  தாக்கிய இத்தொற்றுப்பரவல், நாடு முழுவதும் ஒன்றரை கோடி பேரின் உயிரிழப்பை ஏற்படுத்தியது . இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகள் மிகப் பெரிய பங்களாக்களில் வசித்த படியால் சாதாரண இந்திய மக்களைக் குறித்து சிறிதும் கவலையின்றி காலம் கழித்தனர். 

இத்தொற்றால் பாதிக்கப்படாத நகரமோ,கிராமமோ இந்தியாவில் இல்லை.பெரும்பாலான தெருவெங்கிலும் ஓலக் குரல்கள் கேட்டன.

காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்ற எண்ணத்தையும் விடுதலைப் போராட்டத்தையும்  இந்த அலட்சியக்  கொலைகள்  ஊக்கப்படுத்தியன.


 Posted  by  Saffron Mom


Simplified History- ஓர் அறிமுகம்

வணக்கம்.வரலாற்றை அறிந்து கொள்வதிலும் அதன் மூலம் தற்காலத்தில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளைக் குறித்தும் எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு.பெரும்பாலும் அரசியல் வரலாறுகளில் ஆர்வம் கொண்டிருக்கும் நான் தற்போது என்னுடைய எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய தேடுதல்களையும் கற்றல்களையும் எளிய தமிழில் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்த வலைதளம்.பெரும்பாலும் இந்திய வரலாற்றில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிய சிறு குறிப்புகள் இடம் பெறும்.அவ்வப்போது உலக வரலாற்றையும் எட்டிப் பார்க்கலாம்.முதல் பதிவு வெகு விரைவில். நன்றி.


Posted by : Saffron Mom

Read Next Post : Spanish Flu Pandemic (1918-1920)

Follow by Email